ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட தடை விதித்த தலிபான் அரசு

12 வைகாசி 2025 திங்கள் 11:27 | பார்வைகள் : 115
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் புதிது புதிதாக பல்வேறு அடக்குமுறை சட்டங்களை இயற்றி வருகின்றனர்.
முன்னதாக பெண்கள் விளையாட்டில் ஈடுபடுவதற்கு ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்பட்டது.
அதனையடுத்து, தொழில்முறை கலப்பு தற்காப்புக் கலைகள் (Mixed Martial Arts) மிகுந்த வன்முறையாக இருப்பதாக கூறி அதனை தடை செய்தனர்.
இந்நிலையில், சதுரங்க விளையாட்டை சூதாட்டமாக கருதி, அதற்கு மே 11 ஆம் திகதி முதல் தடை விதித்தனர்.
இது தொடர்பாக பேசிய விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி, "இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வழிமுறையாக கருதப்படுகிறது.
இது நாட்டின் “நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்” படி தடைசெய்யப்பட்டுள்ளது.
சதுரங்க விளையாட்டிற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ள நிலையில் அது தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.
சதுரங்க விளையாட்டில் எந்த சூதாட்டமும் இல்லை என்றும், தடையை நீக்குமாறும் பலரும் தலிபான் அரசின் முடிவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.