பாலஸ்தீன அங்கீகாரம் குறித்து இஸ்ரேல் கடும் அச்சுறுத்தல்!

11 வைகாசி 2025 ஞாயிறு 21:45 | பார்வைகள் : 2081
இஸ்ரேலின் வெளிநாட்டு அமைச்சர் கிடியான் சார் (Gideon Saar) பாலஸ்தீனம் தனிநாடாக, ஒருதலைப்பட்சமாக அங்கீகரிக்கப்பது ஹமாஸ் அமைப்பின் தீவிரவாத நடவடிக்கைகளை நேரடியாக ஆதரிப்பதற்குச் சமமானது என்றும், இதனால் இஸ்ரேல் கடுமையான ஒருதரப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஜெர்மனியின் அமைச்சர் யோஹான் வாடேபுலுடன் (Johann Wadephul) ஜெருசலேமில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதை தெரிவித்துள்ளார். ஜெர்மனி, இஸ்ரேலும் பாலஸ்தீனும் இரு நாடுகளாக அமைதி மற்றும் பாதுகாப்புடன் வாழ ஒரு இருநாட்டு தீர்வையும் ஆதரிக்கிறது.
150க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனிய நாட்டை அங்கீகரித்துள்ளன. மேலும் பிரான்ஸ் உட்பட அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் மற்றும் ஸ்லோவேனியா போன்ற நாடுகள் பாலஸ்தீனிய நாட்டை அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன.
மார்ச் 2ஆம் தேதிக்கு பிறகு, காசா பகுதியில் எந்தவிதமான உதவியும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு உணவு, மருந்து மற்றும் எரிபொருளின் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
"ஹமாஸ் இந்த உதவியை மக்களுக்கு வழங்காமல், தனது போர் உத்தியை வலுப்படுத்த பயன்படுத்தியுள்ளது. இது பொதுமக்களுக்கு எதிரான செயல்," என கிடியான் சார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடருமானால் போர் முடிவதற்கான வாய்ப்பே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.