பாக்., தாக்கினால் பதிலடி கடுமையாக இருக்கும்: பிரதமர் மோடி!

12 வைகாசி 2025 திங்கள் 06:14 | பார்வைகள் : 195
பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், பதிலடி நிச்சயம் கடுமையாக இருக்கும்,'' என அமெரிக்க துணை அதிபர் வான்சிடம், பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த நான்கு நாட்களாக மோதல் நிலவியது. பாகிஸ்தான் அனுப்பிய டுரோன் மற்றும் ஏவுகணைகளை இந்தியா தாக்குதல் நடத்தி அழித்தது. மேலும், அந்நாட்டின் விமான தளங்கள் மீதும் இந்தியா நடத்திய தாக்குதல் காரணமாக, நிலைகுலைந்து போன பாகிஸ்தான், அமெரிக்காவிடம் முறையிட்டது.போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டியது. அதன்படி நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலானதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் நபராக உலகிற்கு அறிவித்தார். அமெரிக்காவின் தீவிர முயற்சியால் இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது. அப்போது பிரதமர் மோடி, 'ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், இந்தியா நிச்சயம் கடுமையான பதிலடி கொடுக்கும். இந்தியாவின் 26 நகரங்கள் மீது பாகிஸ்தான் குறிவைத்தது. இதற்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்தது என தெரிவித்தார்' என அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.