ஒற்றைச் சில் உந்துருளி ஓட்டம் - தீயணைப்புப் படைவீரர் உயிராபத்தில்!!

11 வைகாசி 2025 ஞாயிறு 00:03 | பார்வைகள் : 266
நேற்று, சனிக்கிழமை காலை Évian-les-Bains (Haute-Savoie) தீயணைப்பு நிலையத்தின் வீரர் ஒருவர் ஒற்றைச்சில் உந்துருளி ஓட்டமான ரோடியோவினால் உயிராபத்தான நிலையில் உள்ளார்.
38 வயதுடைய தன்னார்வத் தொண்டு தீயணைப்பு வீரரான இவர், இரவுக் கடமை முடிந்து, காலையில் உறங்கச் சென்றுள்ளார்.
ஆனால் தீயணைப்பு நிலையத்தருகில் ஒற்றைச் சில் உந்துருளி ஓட்டமான ரோடியோ, பெரும் சத்தத்துடன் நடந்துள்ளது. இதனால் சினமடைந்த தீயணைப்பு வீரர், இவர்கள் உடனடியாக ரோடியோ ஓட்டத்தை நிறுத்துமாறு பணித்துள்ளார். அவர்கள் இவரை ஏசி அனுப்பி உள்ளனர்.
இவர் மீண்டும் தீயணைப்பு நிலையத்திற்கு வந்தபோது ஒரு சிற்றுந்து வேண்டுமென்றே வந்து இவரை மோதியெறிந்துள்ளது. பல மீற்றர்கள் தூக்கியயெறியப்பட்ட இவர் படுகாயத்திற்கு உள்ளாகியமையால், சக வீரர்களால் இவரிற்கு அவசர சிகிச்சை அளிகப்பட்டது.
உடனடியாக உலங்கு வானூர்தியில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இன்னமும் உயிராபத்தான நிலையிலேயே உள்ளார்.
இவரை வேண்டுமென்றே மோதியவன், தீயணைப்பு நிலைய சுவரில் சிறுறுந்தை மோதிவிட்டு, சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த வீரர்களை நோக்கித் துப்பிவிட்டு ஓடியுள்ளான்.
இவன் ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் அதீத வன்முறைக் குற்றங்களிற்காகத் தேடப்பட்டவன் என்றும் தெரிவித்த காவற்துறையினர் இவனையும் ரோடியோ ஓடியவர்களையும் கைது செய்துள்ளனர்.