சூர்யாவுடன் மோதும் பிரதீப் ரங்கநாதன்.?

10 வைகாசி 2025 சனி 16:27 | பார்வைகள் : 143
டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் கீர்த்திஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இது பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் 4வது படமாகும்.
தற்போது இந்தப் படத்திற்கு ‘டியூட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது 2025 தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்காக, இயக்குனர் கீர்த்திஸ்வரன் ஒரு வித்தியாசமான காதல் கதையை எழுதி இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
குட் பேட் அக்லிக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸின் இரண்டாவது தமிழ் தயாரிப்பு இது. இந்தப் படத்தில் மூத்த நடிகர்கள் சரத்குமார் மற்றும் ரோகிணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இளம் கோலிவுட் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நடிக்க ஆரம்பித்து சில படங்களே ஆன நிலையில், தற்போது தீபாவளி பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார் பிரதீப் ரங்கநாதன். வருகின்ற தீபாவளிக்கு நடிகர் சூர்யாவின் நடிப்பில், ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இது கோலிவுட் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.