உக்ரைனில் திடீரென்று ஒன்று கூடிய நான்கு நாடுகளின் தலைவர்கள்

10 வைகாசி 2025 சனி 11:13 | பார்வைகள் : 143
உக்ரைனுக்கான அடையாளப் பயணமாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் போலந்து நாடுகளின் தலைவர்கள் தலைநகர் கீய்வில் ஒன்று கூடியுள்ளனர்.
ரஷ்யாவின் செஞ்சதுக்கத்தில் வெற்றிவிழா அணிவகுப்பை ஜனாதிபதி புடின் முன்னெடுத்ததன் 24 மணி நேரத்தில் உக்ரைனில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
மட்டுமின்றி, உக்ரைன் மீது வரவிருக்கும் ஒரு பெரிய வான்வழித் தாக்குதல் குறித்து உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கா எச்சரித்த நிலையிலேயே நான்கு நாடுகளின் தலைவர்களும் விஜயம் செய்துள்ளனர்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜனாதிபதி மேக்ரான், ஜேர்மனியின் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் ஒரே ரயிலில் சனிக்கிழமை பகல் உக்ரைன் சென்றடைந்துள்ளனர். ஆனால் போலந்தின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தனி ரயிலில் பயணம் செய்துள்ளார்.
நான்கு தலைவர்களும் வெள்ளிக்கிழமை இரவு போலந்து நகரமான ரெசோவில் சந்தித்துப் பேசினர், பின்னர் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை, அவர்கள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் சந்திப்பை முன்னெடுப்பார்கள்.
ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனமான மற்றும் சட்டவிரோத முழு அளவிலான படையெடுப்பிற்கு எதிராக, பிரான்ஸ், ஜேர்மனி, போலந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளின் தலைவர்களான நாங்கள் உக்ரைனுக்கு ஆதரவளிப்போம் என தலைவர்கள் நால்வரும் கூட்டு அறிக்கை ஒன்றில் பதிவு செய்துள்ளனர்.
நான்கு ஐரோப்பியத் தலைவர்களும் தங்கள் வருகையின் போது நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்திற்கான கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துவார்கள் என்றே கூறப்படுகிறது.
இதையே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அவரது நிர்வாகமும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
உக்ரைன் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது, ஆனால் ரஷ்யா இதுவரை மறுத்து வருகிறது.
இந்த நிலையிலேயே உக்ரைன் மீது மிகப் பெரிய தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக கியேவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெள்ளிக்கிழமை இரவு ஒரு பொது எச்சரிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.