ஆன்மிகப்பயணத்தில் அண்ணாமலை; இமயமலை பாபா கோவிலில் வழிபாடு

15 சித்திரை 2025 செவ்வாய் 07:12 | பார்வைகள் : 976
தமிழக முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர், இமயமலையில் உள்ள பாபா கோவிலில் தரிசனம் செய்து வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பா.ஜ., தலைவராக பதவி வகித்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த நிலையில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இரு தினங்களுக்கு முன்பு சென்னை வானகரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.,வின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் தலைமைக்கு ஒத்துழைப்பு கொடுத்து, 2026ல் நடக்கும் தேர்தலில் தி.மு.க., அரசை தோற்கடிக்க பாடுபட வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், தலைவர் பதவியில் இருந்து விலகிய அண்ணாமலை, தற்போது ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் நேற்று விமானம் மூலம் டில்லிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து உத்தரகண்ட் சென்று, கேதர்நாத் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் இமயமலையில் உள்ள பாபா கோவிலில் வழிபாடு செய்துள்ளார். பாபா முத்திரையை காண்பித்தவாறு ஒருவருடன் சேர்ந்து அண்ணாமலை எடுத்துக் கொண்ட போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது ஆன்மிக பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து கட்சியினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.