டைட்டானிக் மூழ்குவதற்கு முன்பே கணித்த பயணியின் கடிதம் ஏலம் விடப்பட்டது

29 சித்திரை 2025 செவ்வாய் 15:57 | பார்வைகள் : 119
டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்குவதற்கு முன்னர் பயணி ஒருவர் எழுதிய கடிதம் பிரித்தானியாவில் 300,000 ஸ்ரேலிங் பவுண்களுக்கு ($400,000) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி என்பவர் எழுதியுள்ளார்.
பிரித்தானியாவில் வில்ட்ஷயரில் உள்ள ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் மற்றும் சன் ஏல நிறுவனத்தில் இருந்து இந்த கடிதத்தை ஞாயிற்றுக்கிழமை நபரொருவர் வாங்கியுள்ளார்.
இந்த கடிதம் எதிர்பார்க்கப்பட்ட 60,000 ஸ்ரேலிங் பவுண்களை விட ஐந்து மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் பயணம் நிறைவு செய்த பிறகே சிறந்த கப்பல் என்று தீர்ப்பு வழங்க முடியும் என்று எழுதியுள்ளார். இந்த கடிதம் ஒரு தீர்க்க தரிசனமாக பார்க்கப்படுகிறது. கடலில் பனிப்பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் மூழ்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
டைட்டானிக் கப்பல்
உலகின் மிகப் பிரம்மாண்டமான சொகுசு கப்பலான டைட்டானிக் கப்பல், 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்கு புறப்பட்டது. இது உலகப் புகழ்பெற்ற கப்பலாகும். ஆனால், இந்த டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே அத்திலாந்திக் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த டைட்டானிக் கப்பல் விபத்து ஹாலிவுட் படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.
கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி
1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அவர் சவுத்தாம்ப்டனில் டைட்டானிக் கப்பலில் ஏறிய நாளும், வடக்கு அத்திலாந்திக்கில் பனிப்பாறை ஒன்றில் மோதி அது மூழ்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பான நாளும் திகதியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க நகரம் நோக்கி பயணித்த டைட்டானிக் கப்பலில் இருந்த சுமார் 2,200 பயணிகள் மற்றும் பணியாளர்களில் கர்னல் கிரேசியும் ஒருவர் ஆவார்.
முதலாம் வகுப்பில் பயணித்த கர்னல் கிரேசி C51 கேபினில் இருந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
கப்பல் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி அன்று அயர்லாந்தின் குயின்ஸ்டவுனில் நங்கூரமிடப்பட்டபோது தபாலில் அனுப்பப்பட்டது. 12 ஆம் திகதி லண்டன் தபால் முத்திரையிடப்பட்டது.
டைட்டானிக் கப்பலில் எழுதப்பட்ட எந்த கடிதத்திலும் இல்லாத அளவுக்கு இந்தக் கடிதம் அதிக விலைக்கு விற்பனையை ஈர்த்ததாக ஏலதாரர் தெரிவித்துள்ளார்.
கப்பல் மூழ்கியது குறித்த கர்னல் கிரேசி தி ட்ரூத் அபௌட் தி டைட்டானிக் (The Truth About The Titanic) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதில் தனது அனுபவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
பனிக்கட்டி நீரில் மூழ்கி உயிர்காக்கும் படகில் ஏறி தான் எப்படி உயிர் பிழைத்தார் என்பதை அவர் விவரித்துள்ளார்.
முதலில் உயிர்காக்கும் படகை அடைந்த பாதிக்கும் மேற்பட்ட ஆண்கள் சோர்வு அல்லது குளிரால் உயிரிழந்தனர் என அவர் எழுதியுள்ளார்.
கர்னல் கிரேசி பேரழிவிலிருந்து தப்பித்தாலும், தாழ்வெப்பநிலை மற்றும் அவருக்கு ஏற்பட்ட உடல் காயங்களால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கியது.
1912 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி அவர் கோமா நிலைக்குச் சென்றார், இரண்டு நாட்களுக்குப் பிறகு நீரிழிவு நோயால் ஏற்பட்ட சிக்கல்களால் உயிரிழந்துள்ளார்.