கனேடிய பொதுத் தேர்தலில் மூன்று தமிழர்கள் அபார வெற்றி!

29 சித்திரை 2025 செவ்வாய் 11:18 | பார்வைகள் : 247
கனடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் மூவர் அபார வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கனடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் மூன்று, Conservative கட்சியின் சார்பில் இரண்டு, பசுமை கட்சியின் சார்பில் ஒன்று என மொத்தம் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
இவர்களில் Liberal கட்சியின் சார்பில் போட்டியிட்ட மூன்று தமிழர்களும் வெற்றி பெற்றனர்.
Oakville கிழக்கு தொகுதியில் அனிதா ஆனந்த், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி, Pickering–Brooklin தொகுதியில் ஜுனிதா நாதன் ஆகியோர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
இதுவரை வெளியான உத்தியோகபற்றற்ற முடிவுகளின் அடிப்படையில் அனிதா ஆனந்த் 28,498 (50.4%) வாக்குகளையும், ஹரி ஆனந்தசங்கரி 33,164 (63.9%) வாக்குகளையும்,, ஜுனிதா நாதன் 24,951 (53.2%) வாக்குகளையும் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
இந்தத் தேர்தலில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்று Liberal கட்சி சிறுபான்மை ஆட்சி அமைத்துள்ள நிலையில் மீண்டும் அனிதா ஆனந்த், ஹரி ஆனந்தசங்கரி ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் Conservative கட்சியின் சார்பில் Markham-Stouffville தொகுதியில் போட்டியிட்ட நிரான் ஜெயநேசன், Markham -Thornhill தொகுதியில் போட்டியிட்ட லியோனல் லோகநாதன், பசுமை கட்சியின் சார்பில் Etobicoke வடக்கு தொகுதியில் போட்டியிட்ட சருன் பாலரஞ்சன் ஆகிய தமிழர் தோல்வியடைந்தனர்.