Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் மருந்து தட்டுப்பாடு அபாயம்…!

பாகிஸ்தானில் மருந்து தட்டுப்பாடு அபாயம்…!

28 சித்திரை 2025 திங்கள் 05:05 | பார்வைகள் : 186


இந்தியாவுடனான வர்த்தக நிறுத்தத்தின் விளைவாக பாகிஸ்தானில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக, பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது போன்ற முக்கிய முடிவுகளும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் அரசு இந்தியாவோடு இருந்த அனைத்து வகையான வணிக உறவுகளையும் முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்த அதிரடியான முடிவு, பாகிஸ்தானின் மருந்து விநியோகச் சங்கிலியில் பெரும் நெருக்கடியை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் மருந்துத் தேவையில் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை இந்தியாவையே நம்பியுள்ளது.

குறிப்பாக, மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் பல்வேறு உயர் சிகிச்சைக்கான மருத்துவ பொருட்கள் இந்தியாவிலிருந்து தான் பாகிஸ்தானுக்குச் செல்கின்றன.

இந்நிலையில், வணிக உறவுகள் முறிந்தால் மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படும். இதனை உணர்ந்த பாகிஸ்தான் சுகாதாரத்துறை அதிகாரிகள், அவசரகால தயார்நிலை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் ஊடகங்களின் தகவலின்படி, இந்த அவசர கால நடவடிக்கைகள் நாட்டின் மருந்து விநியோகச் சங்கிலியை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், அவசரகால திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (DRAP) உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

2019ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியின் போது கடைப்பிடித்த வழிமுறைகளை பின்பற்றி, தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க DRAP தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய மருந்துகள், ரேபிஸ் தடுப்பூசி, பாம்பு விஷ முறிவு மருந்து, புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் போன்ற முக்கியமான மருந்துகளின் விநியோகத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு DRAP மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்