காந்தியவாத' தமிழ் அரசியல் தலைவர்

26 சித்திரை 2025 சனி 05:13 | பார்வைகள் : 114
" சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் இபோவில் பிறந்தார்.... மலேசியாவில் மிகவும் தூய்மையான நகரம் என்று பெயரெடுத்தது இபோ. அதனால்தான் போலும் செல்வநாயகத்தின் வாழ்வு சமகால அரசியலில் அறியப்படாத ஒரு தூய்மையைக் குறித்து நின்றது." -- எஸ். ஜே.வி. செல்வநாயகத்தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீது 1977 செப்டெம்பர் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அன்றைய வர்த்தக அமைச்சர் லலித் அத்துலத் முதலி இவ்வாறு கூறினார்.
அந்த அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றிய அன்றைய பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தன, " செல்வநாயகம் உங்களை கைவிட்டு விடக்கூடியவர் அல்லது ஏமாற்றிவிடக்கூடியவர் என்று கூறிய ஒருவரை எனது சமூகத்திலோ அல்லது வேறு எந்த சமூகத்திலோ நான் சந்தித்ததில்லை" என்று கூறினார். இந்த கருத்துக்கள் " நலிந்த உடலைக் கொண்டவரான செல்வநாயகம் வடக்கின் முடிசூடா மன்னாகவே அறியப்படுகிறார். அவரின் நேர்மைக்கு அவரின் எதிரிகளும் மனமுவந்து சான்றுரைப்பார்கள் " என்று பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா 1963 ஆம் ஆண்டில் எழுதியதை அங்கீகரித்து நின்றன.
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவின் இபோ நகரில் 1898 மார்ச் 31 ஆம் திகதி பிறந்தார். கடந்த மார்ச் 31 ஆம் திகதி அவரது 127 வது பிறந்த தினமாகும். அவர் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையை சேர்ந்தவர். அவரது தந்தையார் விஸ்வநாதன் வேலுப்பிள்ளை மலேசியாவில் ஒரு வர்த்தகர். தாயார் ஹரியட் அன்னம்மாவின் கன்னிப்பெயர் கணபதிப்பிள்ளை.
பிள்ளைகள் சிறந்த கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காக செல்வநாயகத்துக்கு நான்கு வயதாக இருந்தபோது தந்தையாரை தவிர, குடும்பம் தெல்லிப்பழைக்கு குடிபெயர்ந்தது. புரட்டஸ்தாந்து கிறிஸ்தவரான செல்வநாயகம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியிலும் இறுதியாக கல்கிசை சென். தோமஸ் கல்லூரியிலும் ( அப்போது அது கொழும்பு முகத்துவாரத்தில் இருந்தது) தனது கல்வியைப் பெற்றார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஆனந்தநாயகம் பின்னர் ஒரு கட்டத்தில் சென்.தோமஸ் கல்லூரியின் வார்டனாக (அதிபர்) பணியாற்றினார். செல்வநாயகமும் எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவும் அந்த கல்லூரியில் ஏககாலத்தில் படித்தவர்கள். ஆனால், பிறகு அரசியலில் மோதிக்கொண்டார்கள்.
செல்வநாயகம் முதலில் லண்டன் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாக படித்து (பி.எஸ்.சி. ) பட்டதாரியானார். அதையடுத்து அவர் சென். தோமஸ் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். பிறகு கொழும்பு லெஸ்லி கல்லூரியிலும் படிப்பித்த அவர் ஆசிரியராக இருந்துகொண்டு சட்டக்கல்வியை தொடர்ந்தார். அதில் சித்தியடைந்ததும் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராக சேர்ந்து கொண்டார். பிரதானமாக சிவில் வழக்குகளுடன் தனது சட்டத்தொழிலை மட்டுப்படுத்திக்கொண்ட அவர் அதன் மூலமாக நன்கு சம்பாதித்தார். நன்கு மதிக்கப்ட்ட ஒரு சிவில் வழக்கறிஞரான அவர் நாளடைவில் இராணி அப்புக்காத்து (கியூ.சி.) ஆனார்.
செல்வநாயகம் 1927 ஆம் ஆண்டில் தெல்லிப்பழையின் மணியகாரர் ( நிருவாகப் பிரதானி ) ஆர்.ஆர். பார் குமாரகுலசிங்கியின் மகள் எமிலி கிறேஸ் பார் குமாரகுலசிங்கியை திருமணம் செய்து கொண்டார். ஆங்கிலக் கல்வியைப் பெற்ற அன்றைய மேட்டுக்குடியினர் வழக்கமாக அணியும் மேற்கத்தைய பாணி உடைக்குப் பதிலாக செல்வநாயகம் தனது திருமணத்தின்போது தமிழ்த்தேசிய ஆடையான வேட்டி, சால்வையை அணிந்தார்.
தமிழ்மொழி மற்றும் தமிழ்க் கலாசாரம் மீதான செல்வநாயகத்தின் பாசம் அரசியல் நோக்கங்களுக்காக செயற்கையான முறையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒன்று அல்ல. அது ஆழமான இயல்புணர்ச்சியின் விளைவானது. அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக அவர் தன்னை யாழ்ப்பாணத்தவர் என்றே எப்போதும் சொல்வார். வீட்டில் சாத்தியமான அளவுக்கு அவர் வேட்டியையே கட்டியிருப்பார். சட்ட அல்லது உத்தியோகபூர்வ அலுவல்கள் அல்லது பல்வேறு சமூகத்தவர்கள் கலந்துகொள்ளும் ஒன்றுகூடல்களை தவிர மற்றும்படி செல்வநாயகம் தமிழர்களுடன் தமிழில் தான் உரையாடுவார். ஒரு தமிழ்க் கல்விமானாக இல்லாவிட்டாலும் கூட பண்டைய தமிழ் இலக்கியங்களுடன் நன்கு பரிச்சயமானவராக விளங்கிய அவர் கர்நாடக சங்கீதத்தையும் பரதநாட்டியத்தையும நன்கு இரசிப்பார்.
தமிழ்க் கலாசாரத்துடன் இத்தகைய நெருக்கத்தைக் கொண்டிருந்த போதிலும், அதேயளவுக்கு கிறிஸ்தவ மதத்திலும் நம்பிக்கைகளிலும் பற்றுறுதி கொண்டவராக செல்வநாயகம் விளங்கினார். தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாணப் பங்கின் ஒரு உறுப்பினரான அவர் கொழும்பில் அங்கிளிக்கன் தேவாலயத்தின் ஆராதனைகளில் பங்கேற்றார். ஆனால், வெள்ளவத்தையில் தென்னிந்திய திருச்சபை தேவாலயம் ஒன்றை திறந்த பிறகு கூடுதலாக அங்கு வந்து வழிபட்டார். அவரது கிறிஸ்தவம் அரசியல் பணிக்கு ஊக்கம் அளித்தது.
சாமுவேல் , ஜேம்ஸ் என்பவையே செல்வநாயகத்தின் கிறிஸ்தவப் பெயர்களாக இருந்தபோதிலும், விவிலியத்தில் வரும் மோசஸ் தான் அவர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். பின்னரான நாட்களில் அவர் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தனது மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுத்து செழிப்புமிக்க -- வாக்களிக்கப்பட்ட பூமிக்கு அழைத்துச் செல்லும் ஒரு மோசஸாகவே தன்னைப் கருதிக்கொண்டார்.
செல்வநாயகத்தின் மறைவுக்கு பிறகு வெள்ளவத்தை தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தில் இடம்பெற்ற நினைவு ஆராதனையில் ஆயர் டி.ஜே. அம்பலவாணர் ' என் மக்களை போக விடு ' (let my people go) என்ற வேதாகம வசனத்தின் (Exodus 5.1) கீழ் மனதைத் தொடும் பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தினார். குறிப்பிட்ட அந்த விவிலிய வரிகள் மோசஸ் மற்றும் பார்வோன் (Pharaoh) உடனும் எகிப்தில் உள்ள இஸ்ரவேலருடனும் தொடர்புடைய பழைய ஏற்பாட்டில் உள்ளவையாகும்.
குறிப்பிட்ட சில அரசியல் பிரச்சினைகளைப் பற்றி சந்தேகம் வந்து உறுதியான தீர்மானத்தை எடுக்கமுடியாமல் இருந்த நேரங்களில் செல்வநாயகம் அமைதியாக தியானத்திலும் பிரார்த்தனையிலும் ஈடுபடுவார் என்று அவரது அரசியல் சகாக்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது அவரது துணிவாற்றலை வலுப்படுத்தியது. பிரார்த்தனைக்கு பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்ததும் அதில் அவர் உறுதியாக இருப்பார். எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யமாட்டார்.
இந்துப் பண்புகள் மீதும் பற்று
இந்த கிறிஸ்தவ நம்பிக்கைக்கு மத்தியிலும் செல்வநாயகம் பெரும்பான்மையான ஒரு சைவச் சூழலில் இந்துப் பண்புகளையும் உள்வாங்கிக்கொண்டார். அவரது நெருங்கிய உறவினர்கள் பலர் இந்துக்களாகவும் இருந்தனர். தமிழ்க் கலாசாரம் மீதான அவரது பற்று இந்துப் பண்புகள் நோக்கி அவரை ஈர்த்தது. இதனால் தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் தன்னை மதத்தால் கிறிஸ்தவர் என்றும் கலாசாரத்தால் இந்து என்றும் கூறக்கூடியதாக இருந்தது. அரசியல் அனுகூலத்துக்காக அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை அவர் எடுக்கவில்லை என்பது முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
செல்வநாயகத்தின் பாராளுமன்ற தொகுதியான காங்கேசன்துறையிலும் தமிழ்ச் சமூகத்திலும் அதிகப் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே. இந்து தமிழர்கள் மீது அவர் அன்பைக் கொண்டிருந்தாலும் அரசியல் ஆதரவை வளர்த்துக் கொள்வதற்காக அவர் அவ்வாறு செயற்கையாக நடந்து கொண்டதில்லை. அரசியலுக்கு வருவது குறித்து நினைப்பதற்கு முன்னரேயே அந்த பண்புகளை அவர் மனதில் பதியவைத்துக் கொண்டார்.
அரசியல் பயன்களுக்காக செல்வநாயகம் மதக் கோட்பாடுகளை விட்டுக் கொடுத்ததில்லை என்பதே உண்மை. அவரது ' கிறிஸ்தவத்தை ' அரசியல் எதிரிகள் அவருக்கு எதிராக அடிக்கடி பயன்படுத்தினார்கள். அவரது தமிழ் அரசியல் போட்டியாளர்கள் மதக்கூச்சலை தொகுதி மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பல தடவைகள் கிளப்பினார்கள். இந்துக்களுக்கே உரித்தான தமிழ்த் தலைமைத்துவத்தை அபகரிக்க முயற்சித்த ஒரு கிறிஸ்தவ வெளியாளாக அவர் காண்பிக்கப்பட்டார். இலங்கை தமிழரசு கட்சி முதன் முதலாக போட்டியிட்ட 1952 பொதுத் தேர்தலில் அது தீவிரமாகக் கூறப்பட்டது. 1956 ஆம் ஆண்டுக்கு பிறகு பொருட்படுத்தக்கூடிய எந்தவொரு அரசியல்வாதியும் செல்வநாயகத்துக்கு எதிராக கிறிஸ்தவ விரோதக் கூச்சலை வெளிப்படையாக கிளப்புவதற்கு துணிச்சல் கொள்ளவில்லை. ஆனால், மறைமுகமாக அது குசுகுசுக்கப்பட்டது.
மாவிட்டபுரம் போராட்டம்
1970 தேர்தலின்போது இது விடயத்தில் ஒரேயொரு விதிவிலக்காக இருந்தவர் பேராசிரியர் சி. சுந்தரலிங்கம் எனலாம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் 1968 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களின் ஆலயப் பிரவேசத்துக்கு எதிரான இயக்கம் ஒன்றை அவர் முன்னெடுத்தார். அந்த இயக்கத்தில் அவரின் பாத்திரம் அவருக்கு காங்கேசன்துறை தொகுதிக்குள் வருகின்ற மாவிட்டபுரம் பகுதியில் சாதி அபிமானம் கொண்ட பல உயர்சாதி இந்துக்களின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது.
அந்த சர்ச்சையில் இருந்து செல்வநாயகமும் தமிழரசு கட்சியினரும் பொதுவில் விலகியே இருந்தனர். ஆனால், ஆலயப் பிரவேசத்துக்கு உரிமை கோரிப் போராடிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு அவர்கள் தார்மீக ஆதரவை வழங்கினர். காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், அந்த பிரச்சினையில் செல்வநாயகம் நேரடியாக சம்பந்தப்படாததால் வெறுப்படைந்திருந்த பழமைவாதப் போக்குடைய தமிழ் வட்டாரங்கள் மத்தியில் தனக்கு ஆதரவைத் தேடுவதற்கு சுந்தரலிங்கம் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதில் நாட்டம் காட்டினார். அதனால் அவர் அப்பட்டமாகவே செல்வநாயகத்துக்கு எதிராக கிறிஸ்தவ விரோதப் பிரசாரத்தை தூண்டிவிட்டார்.
வெள்ளியிலான வேல் ஒன்றையும் மரத்தாலான சிலுவை ஒன்றையும் காங்கேசன்துறை தொகுதியெங்கும் சுந்தரலிங்கம் கொண்டுதிரிந்தது அந்த பிரசாரத்தின் ஒரு அட்டகாசமான அம்சமாகும். அவற்றை உயர்த்திக் காண்பித்து " வேலா சிலுவையா ? " என்று மக்களைப் பார்த்து சுந்தரலிங்கம் உரத்துக் கேட்டார். ஆனால், காங்கேசன்துறை தொகுதியின் அதிகப் பெரும்பானமையான இந்து வாக்காளர்கள் செல்வநாயகத்தை மீண்டும் தெரிவுசெய்து சுந்தரலிங்கத்துக்கு சரியான ஒரு பதிலைக் கொடுத்தனர்.
1956 தேர்தலில் மாத்திரம் தோல்வி
இரு இடைவெளிகளை தவிர, 1947 ஆம் ஆண்டு தொடக்கம் 1977 ஆம் ஆண்டு வரை செல்வநாயகம் காங்கேசன்துறை தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தார். முதலாவது இடைவெளி 1952 -- 56 காலப்பகுதியாகும். 1952 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சுப்பையா நடேசபிள்ளையிடம் செல்வநாயகம் தோல்வி கண்டார். இரண்டாவது இடைவெளி 1972 அக்டோபர் -- 1975 பெப்ரவரி காலப்பகுதி. 1972 ஆம் ஆண்டில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிவியில் இருந்து விலகிய செல்வநாயகம், 1972 அரசியலமைப்பை தமிழர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதை பரீட்சித்துப் பார்க்கும் ஒரு வழிவகையாக காங்கேசன்துறையில் இடைத்தேர்தலை நடத்துமாறு அன்றைய பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்கவுக்கு சவால் விடுத்தார். நீண்ட கால தாமதத்துக்கு பிறகு இறுதியில் 1975 ஆண்டில் இடைத் தேர்தலை அரசாங்கம் நடத்தியது. அதில் செல்வநாயகம் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளினால் பெருவெற்றி பெற்றார்.
1952 பொதுத்தேர்தலில் மாத்திரமே செல்வநாயகம் தோல்வி கண்டார். அப்போதுதான் தமிழரசு கட்சி வளர்ந்துகொண்டிருந்த நிலையில் தமிழ் வாக்காளர்கள் அதன் கொள்கைகளினால் பெரிதாக கவரப் பட்டிருக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜீ.ஜீ. பொன்னம்பலம் தொடர்ந்தும் தமிழர் அரசியலை ஆதிக்கம் செய்து கொண்டிருந்தார். புதிய கட்சியின் தலைவரான செல்வநாயகம் தான் போட்டியிட்ட தொகுதியை விடவும் கட்சியின் சார்பில் மற்றைய தொகுதிகளில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்காக பிரசாரங்களில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்.
செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட நடேசபிள்ளை தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயமாக அமைச்சராக வருவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாக இருந்தது. இந்த காரணங்கள் எல்லாம் சேர். பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனான நடேசபிள்ளை தெரிவாவதற்கு அனுகூலமானவையாக அமைந்தன. அத்துடன் செல்வநாயகம் ஒரு கிறிஸ்தவர் என்ற பிரசாரமும் தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் பயன்படுத்தப்பட்டது.
தேர்தல் பிரசாரத்தின்போது தமிழரசு கட்சியின் சகல வேட்பாளர்களும் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு ஒரு விசேட பூசைக்காக சென்றனர். செல்வநாயகமும் அங்கு சென்று மேலங்கி இல்லாமல் கைகளைக் கட்டிய வண்ணம் நின்றார். இந்து சமய முறைப்படி காளாஞ்சி வழங்கப்படும்போது செல்வநாயகம் அதனை ஏற்றுக்கொள்வதைப் படம்பிடிக்க வேண்டும் என்று முன்னாள் ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வீ. நவரத்தினம் விரும்பினார்.
காங்கேசன்துறை தொகுதியில் நிலவிய கிறிஸ்தவ விரோத பதற்றத்தை தணிப்பதற்கான ஒரு முயற்சியாக, கிறிஸ்தவராக இருந்த போதிலும் செல்வநாயகம் இந்துச் சடங்காசாரங்களையும் அனுஷ்டிக்கும் ஒரு மனிதர் என்று காண்பிப்பிப்பதே நவரத்தினத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால், படம் பிடிக்கப்படுவதற்கு மறுத்த செல்வநாயகம் இந்து மதத்தை தான் மதிக்கின்ற போதிலும், வாக்குகளுக்காக வழிபாட்டு பாசாங்குகளில் ஈடுபடுமளவுக்கு தாழ்ந்துபோக விரும்பலில்லை என்று கூறினார். அத்தகைய ஏமாற்று வேலைகளைச் செய்து வெற்றி பெறுவதிலும் பார்க்க தோல்வி காண்பது மேல் என்று அவர் கூறினார். அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.
கிறிஸ்தவ விரோத பிரசாரங்கள்
மதம் ஒரு இடையூறாக இருந்ததனால் 1952 தேர்தலில் தோல்வி கண்ட அதே மனிதர் காங்கேசன்துறை தொகுதியில் தொடர்ச்சியாக ஆறிற்கு மேற்பட்ட தடவைகள் ( 1956, 1960 மார்சு, 1960 ஜூலை, 1965, 1970, 1975) வெற்றிபெற்றார். தனது மதக் கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காமலும் மதரீதியான வாதங்களில் ஈடுபடாமலும் அவர் அந்த சாதனையை செய்து காட்டினார்.
இந்து பெரும்பான்மை தமிழர்களுக்கு தலைமை தாங்குவதில் செல்வாவுக்கு இருக்கும் உரிமையை கேள்விக்குள்ளாக்கி கிறிஸ்தவ பூச்சாண்டியைக் காட்டி தமிழரசு கட்சியின் நம்பகத்தன்மையை மலினப்படுத்தும் வகையிலான முயற்சிகளையும் அரசியல் எதிரிகள் முன்னெடுத்தார்கள். அத்தகைய பிரசாரங்களை செல்வாயகத்தின் ' இந்து ' தளபதிகள் உறுதியான முறையில் முறியடித்தார்கள்.
இன்னொரு கருத்துக் கோணத்திலும் கூட காங்கேசன்துறையில் ( 83 சதவீதம் இந்துக்கள், 16 சதவீதம் கிறிஸ்தவர்கள்) செல்வநாயகத்தின் தொடர்ச்சியான வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அவர் மக்களின் அன்றாட அலுவல்களை கவனிக்கும் ஒரு பாரம்பரியமான பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. தமிழ் மக்களின் பரந்தளவிலான அரசியல் சார்ந்த பிரச்சினைகள் மீதே அவர் பெருமளவுக்கு கவனம் செலுத்தினார். பிறகு உடல்நலம் குன்றத்தொடங்கியதும் அவர் தொகுதிக்கும் அடிக்கடி வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த பிரச்சினைகள் எல்லாம் இருந்த போதிலும் கூட காங்கேசன்துறை வாக்காளர்கள் செல்வாவை தொடர்ந்து தெரிவு செய்தார்கள். முன்னாள் செனட்டரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபையின் தலைவருமான (பொட்டர்) எஸ். நடராஜாவே அந்த மக்களின் நலன்களை கவனிக்கும் பணிகளைச் செய்து காங்கேசன்துறை தொகுதியின் உத்தியோகபூர்வமற்ற பாராளுமன்ற உறுப்பினர் போன்று விளங்கினார்.
செல்வநாயகத்தின் மதத்தை மக்கள் கருத்தில் எடுக்கவில்லை.தமிழரசு கட்சியே தொடர்ந்தும் முதன்மையான தமிழ் அரசியல் சக்தியாக விளங்கியது. கிறிஸ்தவ விரோத முயற்சிகள் நுணுக்கமான முறையில் தொடரவே செய்தன. அவற்றில் ஒன்று யாழ்ப்பாணத்தில் இந்து பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழ் காங்கிரஸின் கோரிக்கையாகும். திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழரசு கட்சியின் கோரிக்கைக்கு எதிராகவே அந்த கோரிக்கையை தமிழ் காங்கிரஸ் முன்வைத்தது. அது மத அடிப்படையில் தமிழரசு கட்சிக்கும் செல்வநாயகத்துக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதை மாத்திரமல்ல, யாழ்ப்பாண இந்து வாக்காளர்களை கவருவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமிட்ட ஒரு தந்திரோபாயமாகும்.
தமிழ் மக்களின் மதசார்பின்மை
செல்வநாயகத்தை மலினப்படுத்தி தலைமைத்துவத்தில் இருந்து அவரை அகற்றுவதற்கு தமிழ் அரசியல் போட்டியாளர்கள் ஒருபுறத்தில் முயற்சித்துக் கொண்டிருந்த அதேவேளை, சிங்களவர்கள் மத்தியிலும் குறிப்பிட்ட சில பிரிவினர் அவரின் தலைமைத்துவத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பிரயத்தனங்களில் ஈடுபட்டார்கள். இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தமிழர்களுக்கு கிறிஸ்தவரான செல்வநாயகம் பொருத்தமான ஒரு தலைவர் அல்ல என்று கூறி அவர்கள் அவருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதில் நாட்டம் காட்டினார்கள். இருந்தாலும் செல்வநாயகம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். மத அடிப்படையில் எந்த விதமான விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் தொடர்ச்சியாக அவர் காங்கேசன்துறை மக்களினால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு வந்தார். அவரின் வெற்றிகள் அடிப்படையில் தமிழ் மக்களின் மதசார்பற்ற மனோபாவத்துக்கும் இலங்கையில் இந்து மதத்தில் காணப்பட்ட சகிப்புத்தன்மைக்கும் கிடைத்த ஒரு மதிப்பாகும்.
இது தொடர்பில் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்றை நினைவுபடுத்த வேண்டியது பொருத்தமானதாகும். சிலோன் டெயிலி நியூஸ் பத்திரிகையில் 1970 அக்டோபர் 3 ஆம் திகதி வண. ஹேவன்பொல ரத்னசார தேரர் எழுதிய கடிதம் ஒன்றுக்கு பதிலளித்த செல்வநாயகம் ," என்னை கிறிஸ்தவன் என்று குறிப்பிட்டிருக்கும் நீங்கள் மதத்தால் பிரதானமாக இந்துக்களாக இருக்கும் தமிழர் தமிழர்களுக்கும் எனக்கும் ஒற்றுமை எதுவும் கிடையாது என்று கூறியிருக்கிறீர்கள். தங்களுக்கு தலைமை தாங்குவதற்காக எங்களது மதத்தை மாற்றிக்கொள்ளுமாறு என்னையோ அல்லது வேறு எந்த கிறிஸ்தவரையுமோ நிர்ப்பந்திக்கவில்லை என்பதற்காக இந்து மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்" என்று எழுதினார். இது " டொனமூர் பௌத்தர்கள் " என்ற ஒரு தோற்றப்பாட்டை பற்றிய குறிப்பு என்பது தெளிவானது. டொனமூர் அரசியலமைப்பின் கீழ் சர்வஜனவாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தங்களது தேர்தல் வெற்றி வாய்ப்புக்களுக்காக சில சிங்கள கிறிஸ்தவர்கள் பௌத்தர்களாக மாறினார்கள். 1960 -- 65 காலப்பகுதியிலும் கூட செல்வநாயகத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இந்த அடிப்படையில் சில தொடர்பாடல்கள் இடம்பெற்றன.
தேசியவாத மறுமலர்ச்சி
காலனித்துவத்துக்கு எதிரான சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் தேசியவாத மறுமலர்ச்சிகளில் குறிப்பிட்ட சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றின் முக்கியமான அம்சமாக மதமே இருந்தது.அநகாரிக தர்மபாலவினாலும் ஆறுமுக நாவலரினாலும் முன்னெடுக்கப்பட்ட மறுமலர்ச்சிவாதம் மதத்தை அதாவது முறையே பெளத்தத்தையும் இந்துமதத்தையும் அடியொற்றியதாக அமைந்தது. ஆனால், காலனித்துவத்துக்கு பின்னரான இந்த மறுமலர்ச்சிவாத இயக்கத்தின் தொடர்ச்சி ஒரு பெரிய வேறுபாட்டைக் கண்டது. சிங்கள அரசியல் கருத்தாடல் சிங்கள பௌத்த தேசியவாத உணர்வுடன் தொடர்ந்தது. அதுவே சிங்கள மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய கோட்பாடாக விளங்கியது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களை சிங்கள பௌத்த தேசியவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக பார்த்தார்கள். அதனால் எதிர்வினை வேறுபட்டதாக இருந்தது. அது மதத்தையல்ல, மொழியை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. சிங்கள தேசியவாதத்துக்கு எதிராக தமிழ்த் தேசியவாதம் கிளம்பியபோது அது பெருமளவுக்கு மதச்சார்பற்றதாக மாறியது.
அது ஒரு தமிழ் இந்துத் தேசியவாதமாக இருக்கவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தன. எஸ். ஜே.வி. செல்வநாயகமும் தமிழ்க் கத்தோலிக்க கல்விமான் வணபிதா சேவியர் தனிநாயகம் அடிகளாரும் இதற்கு பங்களிப்புச் செய்த முக்கியமான இரு காரணகர்த்தாக்களாவர். உலகம் பூராவும் தமிழியல் ஆய்வு மீது அக்கறையை ஊக்கவிப்பதன் மூலம் தனிநாயகம் அடிகளார் ஒரு தமிழ்க் கலாசார மறுமலர்ச்சியை முன்னெடுத்தார். அவரின் பணிகள் தமிழர்களை அவர்களது புகழ்மிக்க பாரம்பரியம் குறித்து பெருமைப்பட வைத்தது.
செல்வநாயகம் சிங்களத் திணிப்புக்கு எதிரான தமிழ் அரசியல் இயக்கத்துக்கு தலைமைதாங்கி வழிநடத்தினார். தமிழ்க்கப்பலின் மகத்தான மாலுமியாக அவரது செயற்பாடுகள் மொழியை மையமாகக் கொண்ட மதசார்பற்ற தமிழ்த் தேசியவாதப் பாதையொன்றை வகுத்தது. மொழியை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதத்தின் முனைப்பு தமிழ் இந்துக்களையும் தமிழ் கிறிஸ்தவர்களையும் மாத்திரமல்ல " தமிழ்பேசும் மக்கள் " என்ற கோட்பாட்டின் கீழ் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களையும் உள்ளடக்குகிற அளவுக்கு வெற்றிகரமானதாக விளங்கியது. ஒரு பற்றார்வத்துடனும் குறிக்கோளுடனும் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த மனிதர் தானாக விரும்பி அரசியலுக்கு வந்த ஒருவரல்ல.
உயர்நீதிமன்ற நீதிபதியாக வரவேண்டும் என்பதே செல்வநாயகத்தின் ஆவலாக இருந்தது. அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகள் அல்லது அவர் கூறுவதைப் போன்று கடவுளின் சித்தம் அவரை அரசியலுக்கு கொண்டுவந்தன. பின்னர் ஒரு கட்டத்தில் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக வருவதற்கான சந்தர்ப்பமும் தோன்றியது. செல்வநாயகம் தனது அரசியல் நிலைப்பாட்டில் விட்டுக்கொடுப்பைச் செய்யாதவராக இருக்கப்போகிறார் என்பதை உணர்ந்து கொண்ட டி.எஸ். சேனநாயக்க அவருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பதவியைக் கொடுப்பதன் மூலமாக அரசியல் ரீதியில் ஒரு தடையை அகற்ற நினைத்தார்.
செல்வநாயகத்திடம் இரு தூதுவர்களை அனுப்பி தனது எண்ணத்தை சேனநாயக்க தெரியப்படுத்தினார். தனக்கு நீதிபதி பதவியை வழங்குவதற்கு அவர் விரும்பியதற்கான நோக்கத்தைப் புரிந்து கொண்ட செல்வநாயகம் அதை ஏற்க மறுத்து விட்டார். மேன்மையான ஆனால் இடைஞ்சல்கள் நிறைந்த அரசியல் இலட்சியப்பாதையில் செல்வதற்காக நீதிபதியாக வேண்டும் என்ற தனது வாழ்நாள் விருப்பத்தை அவர் கைவிட்டார்.
கொந்தளிப்பான டொனமூர் யுகத்தில் செல்வநாயகம் தமிழர் அரசியலில் இருந்து தூரவிலகியிருந்து கொண்டு அரசியல் நிகழ்வுப்போக்குகளை உன்னிப்பாக அவதானித்தார். 1940 களில் கொழும்பு சட்ட நூலகத்தில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை சந்தித்தபோதே அரசியலில் வெளிப்படையான ஆர்வத்தை முதன் முதலாக செல்வநாயகம் வெளிக்காட்டினார். தமிழர் பிரச்சினை தொடர்பில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பப்படவிருந்த மகஜர் ஒன்றில் தானாக முன்வந்து அவர் கையெழுத்திட்டார்.
அதற்குப் பிறகு தமிழ் அரசியல் விவகாரங்களில் நெருக்கமாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்த அவர் தமிழ் காங்கிரஸில் இணைந்து செயற்பட்டார். தீவிர அரசியலில் இறங்குவதற்கு அவரை இணங்கவைத்தவர் முன்னாள் கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேற்பிள்ளையின் தந்தையார் சிவசுப்பிரமணியமே ஆவார். சோல்பரி ஆணைக்குழுவை சந்திப்பதற்கு ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமையில் சென்ற தூதுக்குழுவில் செல்வநாயகமும் இருந்தார். விரைவாகவே தமிழ் காங்கிரஸின் செயற்பாடுகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்ட அவர் 1946 ஆம் ஆண்டளவில் பொன்னம்பலத்தின் " துணை காப்டனாக " கருதப்பட்டார்.
நன்றி Virakesari