வார்த்தை வலையில் சிக்கிய தி.மு.க., அரசு!

25 சித்திரை 2025 வெள்ளி 16:05 | பார்வைகள் : 167
காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது' என்பது பழமொழி. ஆனால், தானே அதை தேடிப் பிடித்து காலில் சுற்றிக் கொண்டால்? அதைப் போன்ற ஒரு விஷயத்தை, தமிழக அரசு செய்துள்ளது.
பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில், கவர்னரின் அதிகாரத்தை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், எட்டு சட்டத்திருத்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால், உச்ச நீதிமன்றம் வரை செல்ல, அந்த நீதிமன்றமும் மிக விசித்திரமான தீர்ப்பை வழங்கிய செய்தி, இரு வாரங்களாக அகில இந்திய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
கவர்னர் நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கு, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அனுமதி வழங்கி, அவை சட்டமானதாக அறிவித்தது. அடுத்தகட்ட நடவடிக்கையாக, அச்சட்டங்கள் அரசிதழிலும் வெளியிடப்பட்டு, அனைத்து நடைமுறைகளும் நிறைவு பெற்றதாக, தி.மு.க., அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது.
இதுவரை மிக நுட்பமாக காய் நகர்த்திய, தி.மு.க.,வின் சட்ட வல்லுநர்கள், ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டனர்.
ஆலோசனை
தி.மு.க., அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்துக்கான ஷரத்தில், 'வேந்தர் என்ற சொல்லுக்கு பதிலாக, மாநில அரசு என்ற சொல் இடம்பெறும்' என்று உள்ளது. இங்குதான் சிக்கல் எழுகிறது.
கவர்னர்தான் வேந்தர். இனி, அவருக்கு அதிகாரமில்லை. மாநில அரசு என்பது என்ன அல்லது யார்? மந்திரி சபையா? அல்லது அதற்கு தலைமை தாங்கும் முதல்வரா? அரசியல் அமைப்பு அப்படி எதுவும் சொல்லவில்லை.
மாறாக, மிகத்தெளிவாக பிரிவு, 154ல் அரசு நிர்வாகத்தின் அதிகாரம் கவர்னரிடம் உள்ளது. அதை அவர் நேரிடையாகவோ, தனக்கு கீழே உள்ள நிர்வாகிகள் வாயிலாகவோ பயன்படுத்தலாம். இதன் பொருள், அரசின் நிர்வாக அதிகாரம் கவர்னரிடம் இருந்தே உருவாவதால், அவரே அதன் தலைவர்.
அடுத்ததாக பிரிவு, 163 கவர்னருக்கு உதவி செய்யவும், ஆலோசனை கூறவும், முதல்வரின் தலைமையில் ஒரு மந்திரி சபை இயங்கும். வானளாவிய அதிகாரம் பெற்றிருந்தாலும், முதல்வர், மந்திரி சபைக்குத்தான் தலைவரே அன்றி, அரசின் தலைவர் அல்ல.
அதிகாரம்
இறுதியாக பிரிவு, 166 மிகத் தெளிவாக, 'மாநில அரசின் அனைத்து நிர்வாக செயல்களும் கவர்னரது பெயரால் நடைபெற வேண்டும்' என்று சொல்கிறது. கவர்னரின் கையெழுத்து இல்லாமல் எந்த அரசாணையும் பிறப்பிக்க முடியாது. இதிலிருந்து என்ன தெரிகிறது? தமிழக அரசு என்றால், சட்டப்படி அது கவர்னரை மட்டுமே குறிக்கும். எனவே, தற்போது தமிழக அரசு கொண்டு வந்து, உச்ச நீதிமன்றம் தலையிட்டு எதை செய்ய நினைத்தார்களோ, அதை அவர்களே முறியடித்துக் கொண்டனர்.
காரணம் முன்னர் வேந்தர் என்ற அதிகாரத்தில், துணைவேந்தர்களை நியமித்த கவர்னர், இப்போது அரசின் தலைவர் என்ற முறையில், அதே அதிகாரத்தைப் பெறுகிறார். இதை என்னவென்று சொல்வது? நம்முடைய இந்த வாதத்திற்கு வலு சேர்க்கின்றனர் கேரள முதல்வர் பினராயி விஜயனும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும். கேரள அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில், வேந்தர் என்பதற்கு பதிலாக, மந்திரி சபை என்று மாற்றியுள்ளனர்.
மேற்கு வங்கம் கொண்டு வந்த திருத்தத்தில், முதல்வர் என்றே குறிப்பிட்டுள்ளனர். எனவே, மாநில அரசு என்ற சொல் கவர்னரையே குறிக்கும் என்பதை அறிந்தே, அவர்கள் இப்படி செயல்பட்டுள்ளனர். கோட்டை விட்டது தி.மு.க., அரசுதான்.