Paristamil Navigation Paristamil advert login

சொந்த மண்ணில் கதறிய லக்னோ... தெறிக்கவிட்ட கேஎல் ராகுல்

சொந்த மண்ணில் கதறிய லக்னோ... தெறிக்கவிட்ட கேஎல் ராகுல்

23 சித்திரை 2025 புதன் 03:55 | பார்வைகள் : 201


அபிஷேக் போரேல். கேஎல் ராகுல் அதிரடி காட்ட 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி டெல்லி அணி அபாரம்.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான மார்கரம் - மிட்செல் மார்ஷ் கூட்டணி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது.

முதல் விக்கெட்டுக்கு 10 ஓவர்களில் 87 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. மார்க்ரம் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்து வந்த வீரர்கள் இந்த தொடக்கத்தை பயன்படுத்த தவறிவிட்டனர். நிக்கோலஸ் பூரன் 9 ஓட்டங்களிலும், அப்துல் சமத் 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

நிதானமாக ஆடி வந்த மார்ஷ் 45 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதில் சமத் மற்றும் மார்ஷ் இருவரும் முகேஷ் குமாரின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். அடுத்து ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆயுஷ் பதோனி களமிறங்கினார்.

இறுதி கட்டத்தில் ஆயுஷ் பதோனி (36 ஓட்டங்கள்) அதிரடி காட்ட லக்னோ வலுவான நிலையை எட்டியது. முகேஷ் குமார் வீசிய 20-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி ஒட விட்ட பதோனி 4-வது பந்தில் போல்டானார். கடைசி 2 பந்துகள் இருந்த நிலையில் பண்ட் களமிறங்கினார்.

அதில் முதல் பந்தை வீணடித்த அவர் 2-வது பந்தில் போல்டானார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்கள் அடித்துள்ளது. மில்லர் 14 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 160 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி களமிறங்கியது. தொடக்கம் முதல் டெல்லி அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர் . அந்த அணியில் அபிஷேக் போரேல். கேஎல் ராகுல் இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர்.

சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதமடித்து அசத்தினர். போரேல் 51 ஓட்டங்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த அக்சர் படேல் அதிரடியாக விளையாடினார். இறுதியில் 17.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு டெல்லி 161 ஓட்டங்கள் எடுத்தது . இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்