Paristamil Navigation Paristamil advert login

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் கூடுதல் குளங்கள் இணைக்க வேண்டும்

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் கூடுதல் குளங்கள் இணைக்க வேண்டும்

22 சித்திரை 2025 செவ்வாய் 14:03 | பார்வைகள் : 252


நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை நீர், ஆறு, நீரோடைகள் வழியாக பவானி ஆற்றில் சங்கமிக்கிறது.

பவானி ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம் தான், மேட்டுப்பாளையம், காரமடை, திருப்பூர், ஈரோடு மக்களின் தாகம் தணிக்கிறது; விவசாய நிலங்களை நனைக்கிறது.

பவானி ஆற்றுநீரை மையப்படுத்தி, ஏராளமான குடிநீர் திட்டங்கள் ஏற்கனவே இருக்கும் நிலையில், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து உதிரியாக, அத்திக்கடவு அணைக்கட்டு வழியாக வெளியேறும் நீர் தான், 2,000 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் மூலாதாரமாக இருந்து வருகிறது.

அந்த நீர், அத்திக்கடவு திட்டம் சார்ந்த, 1,045 குளம், குட்டைகளை நிரப்பி, விவசாய நிலங்களில் பசுமைக்கு, சிவப்புக்கம்பளம் விரித்து வரும் நிலையில், இத்திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்ற உரிமைக்குரல், உள்ளூர் தாண்டி, தமிழக சட்டசபையில் எதிரொலிக்க துவங்கியுள்ளது.

அத்திக்கடவு திட்டம் சார்ந்த தொகுதிகளுக்கு தொடர்பில்லாத, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., புதுார் பூமிநாதன், ''ம.தி.மு.க., முதன்மை செயலர் துரையிடம் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கை அடிப்படையில், அத்திக்கடவு திட்டத்தின் கீழ், காரமடையில், 250 குளங்கள், பவானி சாகரில், 220; அன்னுார் மேற்கில், 60 குளங்கள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள குளங்களில் நிரப்ப, புதிய திட்டம் நிறைவேற் றப்பட வேண்டும்'' என, சட்டசபையில் பேசினார்.

''பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் பகுதிக்குட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளை சுட்டிக்காட்டி, அங்குள்ள குளம், குட்டைகளில் எல்லாம் அத்திக்கடவு திட்டத்தின் கீழ் நீர் வினியோகிக்க வேண்டும்'' என, பவானி சாகர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பண்ணாரி பேசியுள்ளார்.

அத்திக்கடவு ஆர்வலர்கள் கூறுகையில், 'கொங்கு மண்டலத்தின் விவசாய நிலங்களை செழிக்க செய்யும் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ், விடுபட்ட குளம் குட்டைகளை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் இக்கோரிக்கை தொடர்பாக, விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அவர்கள் பேச வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பும். எப்படியாவது திட்டத்தில், கூடுதல்குளம், குட்டைகள் இணைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்,'' என்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்