ஒரு மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள மருந்துகள் கொள்ளை !!

21 சித்திரை 2025 திங்கள் 14:44 | பார்வைகள் : 1006
Nanterre நகரில்(Hauts-de-Seine) அமைந்துள்ள மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்கள் பொது நிறுவனத்தில் (AGEPS) ஏப்ரல் 20 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் கட்டிடத்திற்குள் புகுந்து, புற்றுநோய்க்கான மருந்துகள் அடங்கிய பெட்டிகளை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மருந்துகளின் மதிப்பு சுமார் ஒரு மில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மர்மநபர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் அலுவலகத்திற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் சில மருந்துகள் அடங்கிய பெட்டிகளை திருடியதோடு, குளிரூட்டும் அறையிலிருந்து சில மருந்துப் பெட்டிகளை வெளியே எடுத்து, அவற்றை பயன்பாட்டிற்கு இல்லாத வகையில் மாற்றியுள்ளனர்.
பாதுகாப்பு ஊழியர் ஒருவர், முகமூடி மற்றும் கையுறை அணிந்த ஒருவரை சந்தித்தும், அவரைத் தடுக்கவோ, உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவோ முடியவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து, பரிஸ் பொது மருத்துவமனைகள் அமைப்பான (AP-HP) AGEPS நிறுவனத்தில் கொள்ளை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், விசாரணை நடந்து கொண்டிருப்பதால் தற்போது விவரங்களை பகிர முடியாது என தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, நோயாளிகளுக்கான சிகிச்சை அல்லது மருந்துகள் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.