14 வயதிலே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி சூர்யவன்ஷி சாதனை - வியந்த சுந்தர் பிச்சை

20 சித்திரை 2025 ஞாயிறு 13:00 | பார்வைகள் : 329
ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டி நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி, முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. லக்னோ அணி, 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக லக்னோ தரப்பில், ஆயுஷ் பதோனி(50) மற்றும் மாக்ரம்(66) இருவரும் அரைசதம் அடித்தனர்.
தொடர்ந்து 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து, 178 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி இம்பாக்ட் வீரராக களமிறங்கி, 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 34 ஓட்டங்கள் எடுத்தார். அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி ஆச்சர்யப்படுத்தினார்.
ஐபிஎல் தொடரில் அறிமுகமான இளவயது வீரர் என்ற சாதனையை, வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக பிரயாஸ் ரே பர்மான் தனது 16 வயதில் அறிமுகமானார். அந்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த மெகா ஏலத்தில், சூர்யவன்ஷிக்கு 13 வயது இருக்கும் போதே, ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை வாங்கியது.
இந்நிலையில், சூர்யவன்ஷி விளையாடியது குறித்து, கூகிள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "இன்று நான் அதிகாலை எழுந்து எட்டாவது படிக்கும் சிறுவன் ஐபிஎல் விளையாடுவதைப் பார்த்தேன். என்ன மாதிரியான அறிமுகம் இது!" என வியந்துள்ளார்.