Paristamil Navigation Paristamil advert login

ம.தி.மு.க.,விலும் பனிப்போர் : கட்சி பதவி துரை வைகோ ராஜினாமா!

ம.தி.மு.க.,விலும் பனிப்போர் : கட்சி பதவி துரை வைகோ ராஜினாமா!

20 சித்திரை 2025 ஞாயிறு 14:27 | பார்வைகள் : 337


ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அக்கட்சியின் முதன்மை செயலர் பதவியிலிருந்து துரை வைகோ விலகியுள்ளார். பா.ம.க.,வை தொடர்ந்து, ம.தி.மு.க.,விலும் தந்தை - மகன் இடையிலான பனிப்போர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2019 லோக்சபா தேர்தலுக்குப் பின், அவரது மகன் துரை வையாபுரி, 'துரை வைகோ' என, பெயரை மாற்றிக் கொண்டு, அரசியல் களத்திற்கு வந்தார்.

அவருக்கு ம.தி.மு.க., முதன்மை செயலர் பதவி வழங்கப்பட்டது. அதை எதிர்த்த அன்றைய அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், மாவட்டச் செயலர்கள் சிலரும் கட்சியிலிருந்து வெளியேறினர்.

கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதியான திருச்சியில் போட்டியிட்ட துரை வைகோ எம்.பி.,யானார். அதன்பின், கட்சியை அவர்தான் வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில், துவக்க காலம் முதல் கட்சியில் இருந்து வருபவரும், வைகோவுக்கு மிக நெருக்கமானவருமான துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இது, மோதலாக முற்றிய நிலையில், மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கான முயற்சியை துரை வைகோ மேற்கொண்டார்; அதை வைகோ ஏற்கவில்லை.

ம.தி.மு.க., ஆரம்பித்தபோது, வைகோவுடன் வந்தவர்கள் எல்லாருமே தி.மு.க.,வுக்கு திரும்பி விட்டனர். எஞ்சியிருப்பது சத்யா மட்டுமே என்பதால், அவரையும் இழக்க வைகோ விரும்பவில்லை.

இப்பிரச்னையில், தந்தை - மகன் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் இருந்து வந்தது. இதனால், கோபமடைந்த துரை வைகோ, முதன்மை செயலர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.

துரை அறிக்கை:

என் தந்தை வைகோவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவருக்கு உதவி செய்ய அரசியலுக்கு வந்தேன். ம.தி.மு.க., தலைமை பதவியை நான் ஒருபோதும் விரும்பியதில்லை.

வைகோ அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம். வைகோவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில், தொடர்ந்து ஊடகங்களுக்கு செய்திகளை கொடுத்து, கட்சியை சிதைக்கிற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர். என்னால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை.

கட்சிக்கும், தலைமைக்கும் தீராத பெரும்பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில், முதன்மை செயலராக பணியாற்ற என் மனம் விரும்பவில்லை. எனவே, முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து, என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

இன்று நடக்கும் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்பேன். அதன்பின், கட்சியின் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்துகொள்ள மாட்டேன். அதே நேரத்தில், ம.தி.மு.க.,வின் முதல் தொண்டனாக உழைப்பேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்