Paristamil Navigation Paristamil advert login

மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் தகுதி

மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் தகுதி

19 சித்திரை 2025 சனி 03:47 | பார்வைகள் : 385


இந்தியாவில் இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் பங்குப்றற பாகிஸ்தான் தகுதிபெற்றுள்ளது.

மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட பாகிஸ்தான் தகுதிபெற்றுள்ளதால் ஐசிசியின் அண்மைய தீர்மானத்தின் பிரகாரம் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இரண்டு நாடுகளில் நடத்தப்படவுள்ளது.

இந்தியாவுடன் பெரும்பாலும் இலங்கை அல்லது துபாய் அப் போட்டியை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை பங்குபற்றுவதால் பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட போட்டிகள் இலங்கையில் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

பாகிஸ்தானில் தற்போது நடைபெற்றவரும் 6 அணிகளுக்கு இடையிலான மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் நான்காவது வெற்றியை ஈட்டியதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதை பாகிஸ்தான் உறுதிசெய்துகொண்டது.

மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா, இந்தியா, தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடவுள்ளன. உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதிபெறவுள்ள கடைசி அணி எது என்பது அடுத்த சில தினங்களில் தெரியவரும்.

தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிராக லாகூரில் நடைபெற்ற தகுதிகாண் சுற்று போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 87 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தாய்லாந்து மகளிர் அணி 34.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

எண்ணிக்கை சுருக்கம்

பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்களில் 205 - 6 விக். (சித்ரா ஆமின் 80, பாத்திமா சானா 62 ஆ.இ., திப்பாச்சா புத்தாவொங் 37 - 2 விக்)
தாய்லாந்து 34.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 118 (நன்னாபத் கொன்ச்சாரோன்காய் 19, நத்தாயா பூச்சாதம் 16, ராமின் ஷாமின் 18 - 3 விக்., நஷ்ரா சாந்து 19 - 3 விக்., பாத்திமா சானா 39 - 3 விக்.)

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்