கொலம்பியாவில் அவசரகால நிலை பிரகடனம்

19 சித்திரை 2025 சனி 03:44 | பார்வைகள் : 769
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் (Colombia ) மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு தொடக்கம் முதல் கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 74 பேரில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காய்ச்சலானது ஏடிஸ் மற்றும் ஹேமகோகஸ் வகை நுளம்புகளால் பரவும் ஒருவகை வைரஸ் நோய் ஆகும்.
இதனால் அங்குள்ள டோலிமா பிராந்தியத்தில் 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே மஞ்சள் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் பல கொலம்பியர்கள் வெப்பமான பகுதிகளுக்குச் செல்வதோடு, அங்கு நோயைப் பரப்பும் கொசுக்கள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே, அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குச் செல்பவர்கள் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று கொலம்பிய ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.
மேலும், இலவசமாக வழங்கப்படும் இந்த தடுப்பூசியைப் மக்கள் செலுத்திக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.