CSK அணியில் இணையும் இளம் தென்னாபிரிக்கா வீரர்

18 சித்திரை 2025 வெள்ளி 14:59 | பார்வைகள் : 298
தென்னாப்பிரிக்கா வீரர் டெவால்ட் பிரெவிஸ், சென்னை அணியில் இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில், சென்னை அணி சரியான துடுப்பாட்ட வரிசை இல்லாமல் தடுமாறி வருகிறது.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 5 தோல்வி மற்றும் 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இதனால், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, எதிர்வரும் 7 போட்டிகளில், 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், காயம் காரணமாக அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக, தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ்(Dewald Brevis), சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய டெவால்ட் பிரெவிஸை, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஏலத்தில் 2.2 கோடி ரூபாய்க்கு சென்னை ஒப்பந்தம் செய்தது.
மும்பை அணிக்காக 10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள டெவால்ட் பிரெவிஸ், 230 ஓட்டங்கள் எடுத்து, 133.72 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். SA20 தொடரில், 32 போட்டிகளில் விளையாடி, 676 ஓட்டங்கள் எடுத்து, 145.37 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்காவில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலகளவில் வேகமாக 150 ஓட்டங்கள் எடுத்தவர் என்ற சாதனையை வைத்திருக்கிறார்.
தென்னாபிரிக்கா ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் போல் இவர் விளையாடுவதால், ரசிகர்கள் இவரை 'பேபி டிவில்லியர்ஸ்' என அழைக்கின்றனர்.
ஏற்கனவே காயம் காரணமாக, அணித்தலைவர் ருதுராஜ் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதால், தோனி மீண்டும் சென்னை அணியின் அணித்தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இதே போல் ருதுராஜ்க்கு பதிலாக, மும்பையை சேர்ந்த 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே(ayush mhatre), அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
தோனி பொறுப்பேற்ற பின், ஷேக் ரஷீத், அன்சுல் கம்போஜ் உள்ளிட்ட 2 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டனர். தற்போது, டெவால்ட் பிரெவிஸும் அணியில் இணைய உள்ளார்.
வரும் 20 ஆம் திகதி, வான்கடே மைதானத்தில் நடைபெறும் மும்பைக்கு எதிரான போட்டியில், ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவால்ட் பிரெவிஸ் சென்னை அணியில் இணைய உள்ளார்.