இத்தாலியில் கேபிள் கார் கம்பி அறுந்து விழுந்து விபத்து- 4 பேர் பலி

18 சித்திரை 2025 வெள்ளி 08:03 | பார்வைகள் : 467
இத்தாலியின் நேபிள்ஸ் அருகே நடந்த கேபிள் கார் விபத்தில் 4 பேர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் நேபிள்ஸ்(Naples) நகரின் தெற்கே ஏற்பட்ட பயங்கரமான கேபிள் கார் விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்து இருப்பதுடன், ஒருவர் காயமடைந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேபிள் கார் போக்குவரத்தின் கம்பி ஒன்று அறுந்ததே இந்த விபத்திற்கு காரணம் என்றும், ஒருவர் இன்னும் காணாமல் போயிருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிராந்திய ஆளுநர் வழங்கிய தகவலில், உயிரிழந்தவர்களில் "சுற்றுலா வந்த இரண்டு தம்பதிகள்" அடங்குவர் என தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்த மீட்புப் பணியாளர்கள், உயிர் பிழைத்த ஒரே நபரான நடுத்தர வயதுடைய ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
சுமார் 50 மீட்புப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த விபத்தை தொடர்ந்து மலையடிவாரத்திற்கு அருகே மற்றொரு கேபிள் கார் ஊர்தியில் சிக்கியிருந்த பதினாறு பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நேபிள்ஸைச் சுற்றியுள்ள கம்பானியா பிராந்தியத்தின் தலைவர் வின்சென்சோ டி லூகா RAI-க்கு அளித்த பேட்டியில், அடர்ந்த மூடுபனி மற்றும் பலத்த காற்று காரணமாக மீட்புப் பணிகள் தாமதமடைந்ததாகக் தெரிவித்தார்.