Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

18 சித்திரை 2025 வெள்ளி 05:38 | பார்வைகள் : 3599


ஆபாச பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்,'' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கட்சிப்பதவி பறிப்பு

பெண்களையும், சைவம், வைணவத்தையும் இழிவுபடுத்தும் வகையில், ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரது அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.ஆனால், தி.மு.க., தலைமை, பொன்முடியை கட்சிப்பதவியில் இருந்து மட்டும் நீக்கியது; அவர் இன்னமும் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார்.

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடியின் பேச்சு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

விளக்கம் கேட்பு

இதனைத் தொடர்ந்து நீதிபதி கூறியதாவது: பொன்முடியின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது. அமைச்சர் பதவி வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? அவரது பேச்சு பெண்களை மட்டும் அல்லாமல், சைவம், வைணவத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.

வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதற்கு மாலை 4:45 மணிக்குள் டிஜிபி பதிலளிக்க வேண்டும்.

பொன்முடியின் பேச்சு வில்லில் இருந்து விடுபட்ட அம்பை போல் மக்களை சென்றடைந்துவிட்டது. மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நன்றாக தெரிந்தே பொன்முடி பேசி உள்ளார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் காணப்படுகிறது. வேறு யாராவது பேசியிருந்தால் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கும். யாரும் சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஊழலை போல் வெறுப்பு பேச்சை சகித்து கொள்ள முடியாது. பா.ஜ.,வின் ராஜா, நடிகை கஸ்தூரி ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஒத்திவைப்பு

ஏற்கனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட பொன்முடி மீதான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் அந்த சலுகையை தவறாக பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு உள்ளார். இந்த பேச்சுக்காக சலுகையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதா இல்லையா என்பதை வீடியோ கான்பரன்ஸ் அல்லது அரசு வழக்கறிஞர் மூலம் டிஜிபி தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மாலை 4:45 மணிக்கு ஒத்திவைத்தார்.

5 புகார்

இந்த வழக்கு மீண்டும் மாலை 4:45 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பொன்முடி பேச்சு தொடர்பாக 5 புகார்கள் வந்துள்ளன. ஏப்., 12ல் புகார் மனு பெறப்பட்டது எனத் தெரிவித்தார்.

ஆதாரம் உள்ளது

இதனைத் தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: ஒரு புகாரில் மட்டும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 4, 5 வழக்குப்பதிவு செய்தால், விசாரணை நீர்த்து போய்விடும். புகார் இல்லாமல் போலீஸ் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். அமைச்சராக இருப்பவர் கீழ்த்தரமாக பேசலாமா? இதுபோன்று மற்றவர்கள் பேசியிருந்தால் போலீஸ் அமைதியாக இருந்து இருக்குமா?

பொன்முடி பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என தெரிவித்த அவர், இந்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.,23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்