மன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் படகுச் சேவை விரைவில் - ஜனாதிபதி வாக்குறுதி

17 சித்திரை 2025 வியாழன் 12:36 | பார்வைகள் : 306
மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று காலை மன்னாருக்கு முதலாவதாக விஜயம் மேற்கொண்டிருந்தார்.
மன்னார் பஜார் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” ”மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது எனவும், ஆனால் மன்னாரில் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன எனவும், அதனால் தான் தாம் அதனை தற்காலிகமாக இடைநிறுத்தியதாகவும் எதிர்காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்,குறித்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் மேலதிகமாக 4 லட்சம் நபர்களுக்குஅஸ்வஸ்ய நிவாரணம் வழங்கப்படும் எனவும், அரச சேவையில் தமிழ் பேசுபவர்களின் பற்றாக்குறை உள்ளது எனவும், பொலிஸ் நிலையங்களிலும் இது காணப்படுகின்றது எனவும், எனவே, 2,000 புதிய பொலிஸார் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தமிழ் தெரிந்த உங்கள் பிள்ளைகளை பொலிஸ் பணியில் இணைய செய்யுங்கள் எனவும் இது ஒரு மரியாதைக்குரிய வேலையாகும் எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி
நம் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வேலை இது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் அரச பணியில் சேர வேண்டும் எனவும், இதன் மூலம் ஒன்றாக இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது எனவும், சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்தது எனவும், தேசிய மக்கள் சக்தி, இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து அவற்றை விடுவித்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இப் பிரசாரக்கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார்,நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.