ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் இங்குதான் நடைபெறும் - உறுதிப்படுத்திய ஐசிசி

17 சித்திரை 2025 வியாழன் 07:12 | பார்வைகள் : 269
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படுகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த ஒலிம்பிக் தொடர் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
இந்த லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக் போட்டியில், 128 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டி இடம் பெற உள்ளது.
முன்னதாக 1900 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றது.
லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக் கிரிக்கெட்டில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் மட்டும் இடம் பெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள மைதானத்தை, ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.
லாஸ் ஏஞ்செல்ஸின் பொமோனா(pomona) நகரில் ஃபேர்கிரவுண்ட்ஸ்(fairgrounds) என்ற பகுதியில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பை ஐசிசி தலைவர் ஜெய் ஷா வரவேற்றுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், "ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் இணைந்தது ஒரு குறிப்பிட்ட நகர்வாகும்.
கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை மிகப்பெரிய வெற்றியடைய வைப்பதில் சர்வதேச ஒலிம்பிக் குழுவுடன் இணைந்து பணியாற்ற ஐசிசி ஆவலுடன் உள்ளது." என தெரிவித்துள்ளார்.