உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அதிரடி முடிவு...

17 சித்திரை 2025 வியாழன் 06:09 | பார்வைகள் : 754
ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரிய ராணுவம் மட்டுமின்றி சீனாவின் ராணுவமும் உக்ரைனில் களமிறங்கியுள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அம்பலப்படுத்தியுள்ளார்.
போர்க் கைதிகளின் அடையாளங்களை வெளிப்படுத்துவதும், அவர்களை நிருபர்கள் மற்றும் செய்தி ஊடகவியலாளர்கள் முன் அணிவகுக்க வைப்பதும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகக் கருதப்படுகிறது.
ஆனால், உக்ரைன் போரில் சீனா வீரர்களும் களமிறங்கியுள்ளதை நிரூபிக்கும் வகையில் ஜெலென்ஸ்கி இந்த முடிவை எடுத்துள்ளார்.
உக்ரைன் தொடர்பில் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் தனது ஆதரவை குறைத்து வரும் நிலையில், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
தற்போது சீனாவும் ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக களமிறங்கியுள்ளது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், உக்ரைன் பிரதேசத்தில் உக்ரைனியர்களுக்கு எதிராக 155 சீன நாட்டினர் போரிட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
வட கொரியாவை அடுத்து சீனாவையும் இந்தப் போரில் ரஷ்யா ஈடுபட வைத்துள்ளதை கடுமையாக சாடிய ஜெலென்ஸ்கி, இந்த விவகாரத்தில் சீனா சத்தமின்றி அனுமதி அளிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தற்போது போரில் ஈடுபட்டுள்ள குறைந்தது 155 சீன நாட்டினரின் விவரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அவர்களில் இருவர் கிழக்கு டொனெட்ஸ்கில் உயிருடன் பிடிக்கப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.
ஆனால் சீனா தரப்பில் அதை முற்றாக மறுத்தனர்.
இந்த நிலையில், கைதான சீன வீரர்களை ஊடகங்கள் முன்பு உக்ரைன் அம்பலப்படுத்தியதை அடுத்து சீனா கோபமடைந்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சகம் தெரிவிக்கையில், உக்ரைன் நெருக்கடியைத் தொடங்கியவர் சீனா அல்ல, சீனாவும் போரில் பங்கேற்கவில்லை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் உக்ரைனை மொத்தமாக கைவிடலாம் என்ற சூழல் உருவாகி வரும் நிலையில், வேறு வழியின்றி உக்ரைன் சில விதி மீறல்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
உக்ரைன் போரில் எந்த பக்கமும் ஆதரவில்லை என இதுவரை கூறி வந்த சீனாவுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் இந்த முடிவு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகங்கள் முன் நிறுத்தப்பட்ட சீன வீரர்கள் மாண்டரின் மொழியில் பதிலளித்தனர். பொருளாதார நெருக்கடியை அடுத்தே உக்ரைனுக்கு எதிராக களமிறங்க முடிவு செய்ததாகவும், ரஷ்யாவிடம் இருந்து மாதம் 3,000 டொலர் சம்பளமாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.