Paristamil Navigation Paristamil advert login

அ.தி.மு.க., கூட்டணியில் பங்கு கிடையாது :பழனிசாமி விளக்கம்

அ.தி.மு.க., கூட்டணியில் பங்கு கிடையாது :பழனிசாமி விளக்கம்

17 சித்திரை 2025 வியாழன் 14:03 | பார்வைகள் : 460


அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அரசு என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறவில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தான் சொன்னார்,” என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார். அதனால், வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி ஜெயித்தாலும், ஆட்சியில் பங்கு கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சட்டசபை வளாகத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று அளித்த பேட்டி:

அமைச்சர் நேரு, அவரது மகன் வீடுகளில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அமைச்சர் பொன்முடி, பதவியேற்கும் போது அளித்த உறுதிமொழியை மீறி, ஹிந்து மதம் மற்றும் பெண்கள் குறித்து அவதுாறாகப் பேசி உள்ளார்.

வெளிநடப்பு


மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வசமுள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

இக்காரணங்களுக்காக, முதல்வர் தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தோம். அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றோம்; சபாநாயகர் அனுமதிக்கவில்லை. அதனால், வெளிநடப்பு செய்தோம்.

பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், ஹிந்து மதத்தை அவதுாறாகவும் ஒரு அமைச்சர் பேசி உள்ளார். இது, முக்கிய பிரச்னையாக அரசுக்கு தெரியவில்லை.

இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அரசின் கடமை. அமைச்சர் பொன்முடி பேராசிரியராக இருந்தவர். வேண்டுமென்றே திட்டமிட்டு, மதத்தை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்; பெண்களை இழிவுபடுத்தி உள்ளார்.

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களின் மனதையும் புண்படுத்தக் கூடாது என்பது தான், அ.தி.மு.க.,வின் கொள்கை.

பழி சுமத்த திட்டம்


மத்தியில், மாநிலத்தில், தி.மு.க., 16 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அப்போது, மாநில சுயாட்சி சட்டத்தை நிறைவேற்றி இருந்தால், இப்பிரச்னை இருந்திருக்காது.

ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது, வேறொருவர் மீது பழி சுமத்துவதற்காக, மாநில சுயாட்சி அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகித்தபோது, தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம்; அதை தவற விட்டு விட்டனர்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக நாடகத்தை ஆரம்பித்துள்ளனர். தி.மு.க., அரசு மீது வெறுப்போடு உள்ள மக்கள், இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என தேர்தலை எதிர்நோக்கி உள்ளனர். அதை திசை திருப்ப, மாநில சுயாட்சி என்ற நாடகத்தை முதல்வர் அரங்கேற்றி உள்ளார்.

அ.தி.மு.க., தொண்டர்களால் தான், தற்போது அமைச்சராக உள்ள ரகுபதி அடையாளம் காட்டப்பட்டார். அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது, மாநில சுயாட்சி குறித்து தெரியவில்லை. இப்போது, எங்களை குறை கூறுகிறார். அவர் சரியான பச்சோந்தி.

'இண்டி' கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில், மாநில சுயாட்சி இடம் பெறவில்லை. கடந்த லோக்சபா தேர்தலிலும், மாநில சுயாட்சி குறித்து முதல்வர் பேசவில்லை.

பல கட்சிகள் வரும்


அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வலுவான கூட்டணியா, இல்லையா என்பது தேர்தலில் தெரியவரும். தி.மு.க.,வை வீழ்த்த விரும்பும் கட்சிகளை ஒருங்கிணைத்து, தேர்தலில் போட்டியிட முயற்சி செய்கிறோம்.

முதற்கட்டமாக பா.ஜ., இணைந்துள்ளது. இன்னும் பல கட்சிகள் வரும். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். தி.மு.க.,வுக்கு ஏன் எரிச்சல் என்றால், அவர்களுக்கு பயம் வந்து விட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில், கூட்டணி அமைக்கிறோம்.

'அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம்' என, மத்திய அமைச்சர் அமித் ஷா கூறவில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தான் கூறினார்.

விஞ்ஞான மூளையை பயன்படுத்தி, நீங்களாகவே ஏதாவது கூற வேண்டாம். கோவை, திருப்பூர் மாவட்டத்தில், விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு பழனிசாமி கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்