டாஸ்மாக் முறைகேடு ! அமலாக்கத்துறை தரப்பில் ஐகோர்ட்டில் வாதம்

17 சித்திரை 2025 வியாழன் 12:22 | பார்வைகள் : 384
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக சோதனையில் தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றின் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, 'மாநில அரசின் அனுமதி இல்லாமல், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய முடியாது. எந்த வழக்கின் அடிப்படையில், சோதனை நடத்தப்பட்டது என்பதை, அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை. முதல் தகவல் அறிக்கைகள் விபரங்கள் இல்லாமல், வாதங்களை முன் வைப்பது என்பது இயலாத காரியம்,' என டாஸ்மாக் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த நிலையில், 4வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. அப்போது, அமலாக்கத்துறை வாதம் தொடங்கியது. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக சோதனையில் தெரிய வந்துள்ளது. டாஸ்மாக் ஊழியர் லஞ்சம் வாங்கினால், அதன் சங்கிலி பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் உள்ளன, என தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறையின் வாதத்தை தொடர்ந்து வழக்கு விசாரணை நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.