முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கலவரம்: மம்தா குற்றச்சாட்டு

17 சித்திரை 2125 செவ்வாய் 06:16 | பார்வைகள் : 351
மேற்கு வங்கத்தில் வக்ப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று,'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் நகரில் வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 150க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். வேறு சில மாவட்டங்களுக்கும் கலவரம் பரவிய நிலையில் பாதுகாப்பு பணியில் மத்திய படை போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், இக்கலவரம் தொடர்பாக முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகளுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்காணிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். எங்களுக்கு எதிராக சதி செய்ய அனைத்து விசாரணை அமைப்புகளையும் பயன்படுத்துகிறார். பிரதமர் மோடி இல்லாவிட்டால் என்னவாகி இருக்கும்? வக்ப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று.
இந்த கலவரத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையை நான் பார்த்தேன். இது உண்மை என்றால், கலவரத்திற்கு மத்திய அரசே காரணம். பி.எஸ்.எப்., அமைப்புதான், எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையை பி.எஸ்.எப்., தடுக்காதது ஏன்?
போராட்டம் நடத்துபவர்கள், அமைதியான முறையில் போராடுங்கள். பா.ஜ., வந்து உங்களை தூண்டிவிடும். அதனை சரி செய்ய வேண்டியது இமாம்களின் வேலை. ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே பிரிவினை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.