Paristamil Navigation Paristamil advert login

மக்களுக்கு கஷ்டமான சூழ்நிலை; மாற்றவே கூட்டணி: நயினார் நாகேந்திரன்

மக்களுக்கு கஷ்டமான சூழ்நிலை; மாற்றவே கூட்டணி: நயினார் நாகேந்திரன்

17 சித்திரை 2025 வியாழன் 05:14 | பார்வைகள் : 318


மக்களுக்கு கஷ்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதனை மாற்றவே கூட்டணி அமைத்து உள்ளோம், என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

தமிழக பா.ஜ., தலைவராக பதவியேற்றுக் கொண்ட பிறகு நயினார் நாகேந்திரன் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: உலகத்தில் மிகப்பெரிய ஊழல் கட்சி காங்கிரஸ்தான். அக்கட்சி போன்ற ஊழல் கட்சி வேறு ஏதும் இல்லை. அதனுடன் தி.மு.க., கூட்டணி வைத்து உள்ளது. ஆனால், அந்தக் கட்சி தான் மாநில சுயாட்சி கேட்கிறது.

ஊழல் செய்த குடும்பத்தின் அம்சமாக நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்களை கண்டித்து தமிழகம் முழுதும் பா.ஜ., இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். பெண்களுக்கு எதிராக பேசும் பொன்முடிக்கு எதிராக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

பா.ஜ., தான் உண்மையான சமூக நீதி கட்சி தான். கிளைச்செயலர் மாநில தலைவராக முடியும். மாநில தலைவர் தேசிய செயலராக முடியும். யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம்.

திமுக.,வில் குடும்ப ஆட்சி நடக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆட்சி செய்கின்றனர். ஸ்டாலின் பேரனுக்கு திமுக.,வினர் தலைவணங்குவர்.

கூட்டணி பற்றி பேசியது அகில இந்திய தலைமை. கூட்டணி ஆட்சி குறித்து மேலிடம் முடிவு செய்யும். அதிமுக.,வின் நிலைப்பாடு மாறுகிறதா என நாங்கள் கருத்து சொல்ல முடியாது. இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

மக்களுக்கு எதிரான ஆட்சி வேண்டாம் என்ற தீர்மானத்திற்காக கூட்டணி அமைத்து உள்ளோம். மக்களுக்கு கஷ்டமான சூழ்நிலை உள்ளது. இதனை மாற்றவே கூட்டணி அமைத்து உள்ளோம்.

மக்களுக்கு தேவையான பிரச்னைகளை சட்டசபையில் எடுத்து வைத்தோம். தேவையில்லாத பிரச்னைகளை கொண்டு வந்த போது எதிர்த்து பேசி வெளி நடப்பு செய்துள்ளோம். எங்கள் கொள்கைகளில் இருந்து மாறுவதில்லை. மக்களுக்கு கஷ்டமான சூழ்நிலை உள்ளது. இதனை மாற்றுவதற்காக தான் கூட்டணி வைத்து உள்ளோம்.

ஓ.பி.எஸ்., உடன் தினமும் பேசிக் கொண்டு தான் உள்ளோம். தினகரன் ஏற்கனவே தே.ஜ., கூட்டணியில் தான் உள்ளார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

மேலும் மாநில சுயாட்சிக்கு ஆதரவு அளிக்காவிட்டால், பாஜ., டெபாசிட் வாங்காது என தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி கூறியது பற்றி கேட்டதற்கு, தி.மு.க., தான் டெபாசிட் வாங்காது என்றார்

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்