Paristamil Navigation Paristamil advert login

ஐபிஎல் தளத்தில் தமிழுக்கு அனுமதி மறுப்பா? - பிராந்திய மொழிகளை புறக்கணிக்கிறதா பிசிசிஐ?

ஐபிஎல் தளத்தில் தமிழுக்கு அனுமதி மறுப்பா? - பிராந்திய மொழிகளை புறக்கணிக்கிறதா பிசிசிஐ?

16 சித்திரை 2025 புதன் 13:33 | பார்வைகள் : 309


2008 ஆம் ஆண்டு பிசிசிஐயால் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில், சென்னை தொடங்கி டெல்லி வரை இந்தியாவின் முக்கிய 8 நகரங்களின் பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டு, போட்டி நடத்தப்பட்டது.

அந்தப் பிராந்திய மக்களும், ஐபிஎல் அணிகளுக்கு பெரும் ஆதரவை அளித்து வந்தனர்.

தற்போது 10 அணிகளுடன், 18 வது ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு போட்டி நாளுக்கு முன்பாகவும், போட்டி முடிந்த பிறகும் என ஒரு போட்டிக்கு 2 செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்.

இதில், இரு அணிகளின் தரப்பில் இருந்து வீரர்கள் அல்லது பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது வழக்கம்.

போட்டிக்கு முந்தைய நாள் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பை எந்த ஊடகமும் ஒளிபரப்பு செய்துகொள்ள முடியும்.

அதேவேளையில், போட்டி முடிந்த பிறகும் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பை பிசிசிஐ மட்டுமே படம்பிடித்து அந்த செய்தியாளர் சந்திப்பை iplt20.com இணையதளத்தில் மட்டும் வெளியிடுவார்கள்.

இந்த ஒளிபரப்பில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசுவதை மட்டும் ஒளிபரப்புவதாகவும், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை புறக்கணிப்பதாகவும் அதிருப்தி எழுந்துள்ளது.

ஏப்ரல் 5 ஆம் திகதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமங் பதானியிடம், தமிழ் ஊடகத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள், "இந்த தொடரில் டெல்லி அணியின் பயணம் எப்படியிருக்கும்?, சேப்பாக்கத்தில் சென்னை அணியை எதிர்கொள்ள என்ன திட்டமிடல்களோடு வந்தீர்கள்?" என தமிழில் கேள்விகளை எழுப்பினர்.

அந்த கேள்விகளுக்கு, ஹேமங் பதானியும் தமிழிலேயே பதிலளித்தார்.

ஆனால் இந்த செய்தியாளர் சந்திப்பு iplt20.com இணையதளத்தில் வெளியான போது, தமிழில் கேட்கப்பட்டகேள்விகளும், அதற்கு ஹேமங் பதானி தமிழில் சொன்ன பதில்கள் மட்டும் இடம்பெறவில்லை.  

அதேவேளையில், ஹிந்தியில் கேட்கப்படும் கேள்வி மற்றும் வீரர்களின் பதில்கள் அப்படியே ஒளிபரப்பு செய்யப்படும் போது, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை மட்டும் புறக்கணிப்பு செய்வது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

பிசிசிஐயின் தொழில்நுட்ப குழுவில் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்தவர்கள் மட்டுமே இருப்பதால், பிராந்திய மொழிகளில் பேசும்போது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே இவர்களுக்கு புரியாது.

அதில், சர்ச்சையான விஷயங்கள் எதாவது இருந்துவிடக்கூடாது என்பதால், பிராந்திய மொழிகளில் பேசுவதை முழுவதுமாக நீக்கி விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 20,000 கோடி சொத்துகளுடன், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ உள்ளது. இதில் ஐபிஎல் தொடர் மூலம் மட்டுமே, பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி வருகிறது.

அப்படியான நிலையில், ஐபிஎல் போட்டிகளை அனைத்து பிராந்திய மொழி பேசும் மக்களும் ஆதரித்து வரும் நிலையில், கூடுதல் செலவில் அந்தந்த பிராந்திய மொழிகளில் ஏன் ஒளிபரப்பு செய்வதில்லை என குரல் எழுந்துள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்