எந்த கோவிலையும் எந்த ஜாதியும் சொந்தம் கொண்டாட முடியாது; ஐகோர்ட் மீண்டும் திட்டவட்டம்

12 பங்குனி 2025 புதன் 10:23 | பார்வைகள் : 1234
நம்பிக்கையின் பாதையை பின்பற்றுவதற்குப் பதிலாக, ஜாதி அடையாளங்களை மக்கள் சுமந்து செல்வது தான் சர்ச்சைக்கு வழிவகுப்பதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தங்கள் தலைமையில் தான் கோவில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என, எந்த ஜாதியினரும் உரிமையாக கோர முடியாது என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சுமூக தீர்வு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் தாலுகாவுக்கு உட்பட்ட ஜமீன் எளம்பள்ளி கிராமத்தில், மகாமாரியம்மன் என்ற கோவில் உள்ளது.
இந்த கோவிலில், மாசி திருவிழா நடத்த அனுமதி வழங்க கோரி, எம்.பாரத் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:
தமிழ் மாதமான மாசி கடைசி செவ்வாய்கிழமை துவங்கி, 15 நாட்கள் விழா நடக்கிறது.
இந்த திருவிழாவை, தங்கள் தலைமையில் தான் நடத்த வேண்டும் என, ஒரு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து, அறநிலையத் துறை தரப்பில் அமைதிப் பேச்சு நடத்தப்பட்டது. அதில், சுமூக தீர்வு எட்டப்படாததால், அறநிலையத் துறையே விழாவை நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆண்டுதோறும் அமைதி பேச்சு நடத்தப்பட்டு, திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
கடவுள் வழிபாடு
'ஜாதி என்பது மதமல்ல' என, இந்த நீதிமன்றம் வழக்கு ஒன்றில் பிறப்பித்த உத்தரவில், ஏற்கனவே தெளிவாக சுட்டிக்காட்டிஉள்ளது.
கோவில் திருவிழாவில் பங்கேற்கவும், ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களின் வழக்க மான முறையில் கடவுளை வழிபடவும் உரிமை உள்ளது.
அதை மற்ற பிரிவினர் தடுக்கக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் அமைதிப் பேச்சு நடத்த வேண்டிய அவசியமில்லை. அறநிலையத் துறை அதிகாரிகள், திருவிழாவை நடத்த வேண்டும்.
கடவுள் முன் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது. எந்த பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்காமல், திருவிழாவை நடத்த வேண்டும். தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் என, எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது.
நம்பிக்கை
மதம் என்பது ஒருவரின் ஆன்மாவை துாய்மைப்படுத்துவதே என்றும், ஆன்மாவுக்கு ஜாதி தெரியாது என்றும் கூறிய சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை உணராமல், நம்பிக்கையின் பாதையை பின்பற்றுவதற்கு பதிலாக, ஜாதி அடையாளங்களை மக்கள் சுமந்து செல்கின்றனர்.
இதுதான் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது. மனு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது