Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

16 ஆண்டுகளாக தி.மு.க., எதுவும் செய்யாதது ஏன்?

16 ஆண்டுகளாக தி.மு.க., எதுவும் செய்யாதது ஏன்?

3 சித்திரை 2025 வியாழன் 12:42 | பார்வைகள் : 5500


கச்சத்தீவை மீட்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: காங்கிரஸ் ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. இதனால், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டது. நீதிமன்றத்தால் மட்டுமே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என, ஜெயலலிதா உறுதியாக நம்பினார். பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றாமல், நாட்டின் எந்த பகுதியையும் மற்றொரு நாட்டிற்கு தாரைவார்க்க முடியாது என்ற விதியை கண்டுபிடித்தவர் ஜெயலலிதா. நான் முதல்வராக இருந்தபோது, பிரதமரை சந்திக்கும் போதெல்லாம், கச்சத்தீவு மீட்பு குறித்து வலியுறுத்தினேன்.

மீன் வளத் துறை அமைச்சராக இருந்த ஜெயகுமாரை அழைத்து சென்று, பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து, இப்பிரச்னை குறித்து தெளிவாக எடுத்துரைத்தேன். ஆட்சி பொறுப்பேற்று, நான்கு ஆண்டு காலம் இந்த பிரச்னையில், இந்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

இந்த பிரச்னையை லோக்சபாவில் எடுத்து சொன்னால்தான் தீர்வு கிடைக்கும். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு என்ன வாதிட்டது என்பதை முதல்வர் விளக்க வேண்டும். 16 ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் இருந்தபோது, தி.மு.க., எதுவும் செய்யவில்லை.

முதல்வர் ஸ்டாலின்: ஒற்றுமையாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றினோம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இப்போது எங்களை பார்த்து கேட்கும் நீங்களும், 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தீர்கள்; அப்போது என்ன செய்தீர்கள்?

பழனிசாமி: மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது நழுவ விட்டுவிட்டீர்கள்; மற்றவர்களை குறை சொல்லி தப்பிக்க பார்க்கிறீர்கள்.

சபாநாயகர் அப்பாவு: பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி உள்பட பலர், இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளனர். அதேபோல, வரவேற்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: இதற்கு முன் நடந்த பிரச்னைகள், வேறுபாடுகளை பேசினால், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. எல்லாரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவரும் ஆதரவு தர வேண்டும்.

பழனிசாமி: நாங்கள் எதுவும் செய்யாதது போல முதல்வர் சொல்கிறார். நான் முதல்வராக இருந்தபோது, பிரதமரின் வீட்டிற்கே சென்று வலியுறுத்தினேன். சும்மா அங்கு போய் வரவில்லை.

முதல்வர்: நீங்கள் பேசவில்லை என்று சொல்லவில்லை.நானும் பிரதமரை சந்திக்கும்போது கோரிக்கை மனு அளித்துள்ளேன். கடிதம் எழுதியுள்ளேன்.

 அமைச்சர் துரைமுருகன்: நீங்கள் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள். வாஜ்யபாய் ஆட்சியை ஏன் கவிழ்த்தீர்கள்? பேசுவதனால் எதையும் பேசலாம். தீர்மானத்திற்காக வாயை அடக்கி கொண்டு உட்கார்ந்து இருக்கிறோம்.

பழனிசாமி: எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்பதால், வாஜ்பாய் ஆட்சியில் இருந்து வெளியில் வந்தோம்.

முதல்வர்: இந்த தீர்மானத்தை ஒட்டிதான் பேச வேண்டும். அரசியல் விவாதங்களை பேசி, இதை அரசியல் ஆக்கக் கூடாது.

சபாநாயகர்: ஆளும் கட்சி, எதிர்க்கட்சிக்கு சேர்த்து சொல்கிறேன். ஒரு தீர்மானம் முதல்வர் கொண்டு வந்ததால், அதை பற்றி பேச வேண்டும். ஒட்டுமொத்தமாக, 16 ஆண்டுகளுக்கு பின்னால் போனால் எப்படி தீர்வு கிடைக்கும். இப்போது என்ன செய்ய வேண்டும் என யோசனை சொல்லுங்கள்.

பழனிசாமி: மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும், இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்று கணித்து, நீதிமன்றத்திற்கு ஜெயலலிதா சென்றார். ஆளும்கட்சியினர் பேசினால் அனுமதி தருகிறீர்கள்; நாங்கள் சொல்வதற்கு அனுமதி தருவதில்லை. அமைச்சர் கேட்டால் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

அமைச்சர் எ.வ.வேலு: ஒட்டுமொத்தமாக நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், ஒருசேர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, முதல்வர் மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சி தலைவர், 16 ஆண்டுகள் குறித்து திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருக்கிறார். லாலி பாடினால், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. ஒரே உணர்வுடன் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

பழனிசாமி: இது உணர்வுபூர்வமான பிரச்னை; மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை. நம்முடையை உரிமையை மீட்டெடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானம்; அதை அ.தி.மு.க., ஆதரிக்கிறது.

முதல்வர்: எதிர்க்கட்சி தலைவர் கொஞ்சம் முரண்பாடான கருத்தை தெரிவித்தாலும், அதையெல்லாம் மறந்து, இந்த தீர்மானத்தை உளப்பூர்வமாக வரவேற்று பேசியிருக்கிறார்.

விவாத்தில் பேசிய அத்தனை பேருக்கும் தமிழக மக்கள், மீனவர்கள் சார்பில் நன்றி.

இவ்வாறு விவாதம் நடந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்