Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சீமானை அடுத்து ஈ.வெ.ரா.,வை சுட்டிக்காட்டி கவர்னர் பேச்சு

சீமானை அடுத்து ஈ.வெ.ரா.,வை சுட்டிக்காட்டி கவர்னர் பேச்சு

4 பங்குனி 2025 செவ்வாய் 03:14 | பார்வைகள் : 3442


போதையில் ஆடியவர்கள், விஷமத்தனத்தை விதைக்க எழுதப்பட்டவையே ராமாயணமும், மஹாபாரதமும் என்றவர் ஈ.வெ.ரா., ஆனால், அந்த இதிகாசங்களின் கதாபாத்திரங்கள், இவ்வுலகில் வாழ்ந்தவர்கள் என்பதை, சரஸ்வதி நாகரிகம் நிரூபிக்கிறது. இதை சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்வதைவிட, சிந்து சரஸ்வதி நாகரிகம் என்றே சொல்ல வேண்டும். ஐரோப்பியர்கள் நம்மை எப்படி பிரித்து ஆண்டனர் என்பதை, நாம் புரிந்துகொள்ள வேண்டும்,” என, கவர்னர் ரவி பேசினார். தமிழகத்தில் ஈ.வெ.ரா., பற்றி பேசி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இப்போது கவர்னர் ரவியும் பேசி இருக்கிறார்.

சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரியில், சமூகவியல் துறை, 'சென்டர் பார் சவுத் இண்டியன் ஸ்டடீஸ்' அமைப்பின் சார்பிலான, 'சிந்துவெளி நாகரிகம்' என்ற இரண்டு நாள் கருத்தரங்கத்தை, கவர்னர் ரவி நேற்று துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

நாம் யார் என்பதை, இந்த இரண்டு நாள் கருத்தரங்கம் உணர்த்தும். நம் கடந்த கால நாகரிகம் என்பது இறந்த கால நாகரிகம் இல்லை; அது வாழும் கால நாகரிகம். இதைப்போல, கடந்த, 200 ஆண்டுகளில், நம்மைப் போல வன்முறைக்கு ஆளான நாகரிகம் உலகில் எதுவும் இல்லை.

கடந்த 19ம் நுாற்றாண்டின் மத்தியில், ஐரோப்பியர்கள் உலகை காலனியாக்கிக் கொண்டிருந்ததால், தனித்த நாகரிகமான இதை, வன்முறைக்கு ஆட்படுத்த வேண்டி இருந்தது. அதே காலக்கட்டத்தில், ரஷ்யா, ஜப்பான், சீனாவின் சில பகுதிகளை, அவர்களால் பிடிக்க முடியவில்லை.

ஐரோப்பியர்கள், உலகுக்கு அறிவு புகட்டுவதாக கூறினர். இனக் கோட்பாடு எனும், 'ரேஸ் தியரி'யை, 1853ல் வடிவமைத்தனர். அதன்படி, வெள்ளை, மஞ்சள், கருப்பு என நிறத்தால் மனிதர்களை பிரித்து, அவர்களில் வெள்ளை மனிதர்களே அறிவில் சிறந்தவர்கள் என, கட்டமைத்தனர்; அந்த சிந்தனையுடனேயே, உலகை பிடித்தனர்.

அதன்பின் டார்வின் கொள்கை வந்தது. அது, 'திறமையானது, திறமையற்றதை வெல்லும். அதுவே நியதி; அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை' என்றது.

அந்தக் கொள்கையில் ஊறிக் கிடந்ததால், ஆஸ்திரேலிய தேர்தலில், அந்த மண்ணைச் சேர்ந்த மக்களை கொல்லச் சொன்னவர், பிரிட்டன் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்.

ஜெர்மனியில் ஐரோப்பியர்கள் அகழாய்வு செய்தனர். அங்கு, பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்தன. அவற்றில், ஸ்வஸ்திக் முத்திரையும் இருந்தது.

அது, இந்திய இலக்கியங்கள், வேதங்களின் கூற்றுப்படி செல்வத்தின் அடையாளம் மற்றும் சூரிய கடவுள் என, மாக்ஸ்முல்லர் வரையறுத்தார். அது, ஆரியர்கள் பயன்படுத்தியது என்று கூறினார்.

ஆனால், பழமையான சமஸ்கிருதம் மற்றும் சங்க இலக்கியங்களில், ஆரியன் என்ற ரேஸ் இருந்ததாக, எந்த விளக்கமும் இல்லை. ஆனால், 60 - 70 ஆண்டுகளாக, ஆரியன், திராவிடன் என்ற கருத்து, வேற்றுமையை விதைக்க பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

வாழும் நாகரிகம்


ஜெர்மானியர்கள் பல திசைக்கும் சென்றனர். அவர்களில் ஒரு கூட்டத்தினர், இந்தியாவுக்குள் வந்தனர். அப்போது, இங்கிருந்த சிறந்த நாகரிகத்தை அழித்தனர் என்று கூறப்பட்டது; இந்தக் கூற்று, புத்தகங்களில் பதிப்பிக்கப்பட்டது. இதனால், நாட்டுக்காக உழைத்த தியாகிகள், விஞ்ஞானிகள், கவிஞர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தான், தொல்லியல் மிகவும் பேசப்பட வேண்டிய துறையாக உள்ளது. கடந்த வரலாறு, வாழும் வரலாறு என்பதற்கான சான்றுகளை அது தருகிறது.

அதாவது, தமிழகத்தில் இருந்து பல லட்சம் பேர் உட்பட, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், 60 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மஹாகும்பமேளாவுக்கு செல்ல என்ன காரணம்? அவர்களை யார் அழைத்தது? இதுதான், வாழும் நாகரிகம். இதுதான் நாட்டின் ஒற்றுமைக்கு தேவை.

சிந்து நதி நாகரிகம் என்ற பெயரோ; இந்தியா, பாரத் என்ற பெயர்களோ, 1,000 ஆண்டுகளுக்கு முன் இல்லை.

சிந்து நதி நாகரிகம் மட்டுமே


உண்மையில், அது சிந்து நதி நாகரிகம் மட்டுமே. ரிக் வேதத்தில், கங்கை முதல் சிந்து வரை, 10 நதிகள் விளக்கப்பட்டுள்ளன. அதில், சிந்துவில் மட்டும் சப்த சிந்து என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிந்து, ஜீலம், செனாப், ராவி, சட்லெஜ், பியாஸ், சரஸ்வதி ஆகியவை தான் அவை. அவற்றில் சரஸ்வதி நதி தற்போது இல்லை. ஆனால், பிரிட்டிஷ் காலனியாதிக்க மனநிலையில் உள்ளோரால், இதை ஏற்க முடிவதில்லை.

வங்காளத்தை, 1765ல் பிடித்த போது, ஐரோப்பியர்கள், எடின்பரோ பல்கலையில் இருந்து பேராசிரியர்களை அனுப்பி, இந்திய மக்களின் அறிவு, கொண்டாட்டங்களில் களித்திருந்த, ஹிந்து மத கருத்தாக்கங்களை மொழிபெயர்த்தனர்.

அது, ஐரோப்பிய அறிவியல் அறிவை வளர்க்க, அவர்கள் மொழியில் எழுதப்பட்டு விரிவாக்கப்பட்டது. பின், 1900களில், இந்திய அறிவு மட்டுப்படுத்தப்பட்டது.

அப்போதுதான், ரிக் வேதத்தில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் புகழப்படும் சரஸ்வதி நதியே இல்லை என்று, விமர்சித்தனர்.

ஆனால், ஏழு முக்கிய நகரங்களில் சரஸ்வதி நதி பாய்ந்ததை அறிவியல் தற்போது கண்டுபிடித்ததுடன், லோத்தல், தொலவீரா, ராக்கிகடி, காலிபங்கன் உள்ளிட்ட இடங்களை அடையாளப்படுத்தி உள்ளது. சிந்து நதி பாய்ந்த பகுதிகள், ஹரப்பாவும், மொஹஞ்சதாரோவும் தான்.

கூத்தாடியவர்கள்


சரஸ்வதி நதி, சோம்நாத் அருகில் கடலில் கலப்பதை, காளிதாசர் குமாரசம்பவம் நுாலில் எழுதி உள்ளார்.

மஹாபாரதத்தில், கிருஷ்ணனின் அண்ணன், சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. அதை, நாசாவின் செயற்கைக்கோள் படம் உறுதிப்படுத்தி விட்டது. சட்லெஜுக்கும், யமுனைக்கும் இடையில் ஓடியதை அது விளக்கியது. அது, 2,500 ஆண்டுகளுக்கு முன் வற்றி இருக்கலாம் என, கணிக்கப்படுகிறது.

அதனால், சரஸ்வதி நதி கற்பனையானது என்றவர்களின் கூற்றுப்படி, ஆரியர்கள் வந்தேறிகள்; அவர்கள் வேறு இனத்தவர் என்பதும் கற்பிதமாகி உள்ளது.

வேதங்கள் கற்பனைகள் என்றவர்களுக்கு, வேதங்கள் தான் மனிதர்களை இணைக்கும் மந்திரங்கள் என்பதும், விலங்குகள், தாவரங்களையும் வணங்கி மதிக்க வைக்கும் நாகரிகம் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.

ஈ.வெ.ரா., என்ன சொன்னார்... 'ஆரியர்கள் காட்டுமிராண்டிகள், அவர்கள் குடித்து விட்டுக் கூத்தாடியவர்கள். அவர்கள் போதையில் பாடியவை தான் ராமாயணமும், மஹாபாரதமும்' என்றார்.

ஆனால், அவை வாழ்ந்த மனிதர்களின் வரலாறு. அதை, சரஸ்வதி நாகரிகம் நிரூபிக்கிறது. இனி, சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லக் கூடாது சிந்து - சரஸ்வதி நாகரிகம் என்றே சொல்ல வேண்டும்.

கட்டுக்கதைகளை 'அவிழ்த்து' விட்ட காரல் மார்க்ஸ்


நம் நாட்டில் பல இடங்களில், மரபணு சோதனை செய்யப்பட்டதில், யாரும் வெளியில் இருந்து வந்தவர்கள் இல்லை என்பது உறுதியானது. அப்போதைய மண்டை ஓடுகளிலோ, எலும்புகளிலோ காயங்கள் இல்லை. ஆனாலும், ஆரிய - திராவிட கோட்பாட்டை ஐரோப்பியர்கள் நிறுத்தவில்லை.

இந்தியா சுதந்திரத்துக்காக போராடிய போது, இதன் ஒற்றுமையை கெடுக்க, 20 கட்டுக்கதைகளை கட்டுரைகளாக எழுதி காரல் மார்க்ஸ் வெளியிட்டார். இவற்றையெல்லாம், டி.டி.கோசாம்பி விளக்கி உள்ளார்.

இனக்கோட்பாட்டை வெளியிட்ட ஐரோப்பியர்களே, தற்போது அதிலிருந்து வெளியேறி விட்டனர். மூன்று தலைமுறைகளாக படித்ததால், இங்குள்ளவர்கள் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளனர். ஆனால், 'ஒளி ஒருவருக்கு சொந்தமில்லாதது. அது செல்லும் இடமெல்லாம் பரவக்கூடியது' என்பதை, இந்தியர்களின் பழமையான வேதங்கள் தருகின்றன.

புனிதமானவை


'ஆரியன்' என்ற வார்த்தை, வேதத்தில் உள்ளது. 'அனைவரையும் அரவணைத்துச் செல்லும் உயர்ந்த எண்ணம் உள்ளவர் தான் ஆரியன்' என்கிறது. அதாவது, அய்யா என்ற தமிழ் வார்த்தையின், பிராகிருத வார்த்தை தான் ஆரியன்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது தான் நம் கோட்பாடு. அதுதான், அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும். இது, நாடு முழுக்க உள்ள அனைவரின் நிலையாக இருந்தது.

ராமேஸ்வரம், சேதுபதி மன்னருக்கோ; காசி, அங்குள்ள மன்னருக்கோ சொந்தமானதல்ல. அவர்கள் அங்கு ஆட்சி செய்திருக்கலாம். இன்றுவரை, அவை இந்தியர்களுக்கான புனித பூமியாக இருக்க, இந்த எண்ணம் தான் காரணம்.

இது, அரசியலால் ஆன பூமி அல்ல; அன்பால் நிறைந்த புண்ணிய பூமி. இங்குள்ள நதிகள், மலைகள், மண், மரம் அனைத்தும் புனிதமானவை.

அதைத் தான், சுதந்திரப் போராட்டத்தின் போது, அரவிந்தர் உள்ளிட்டோர் விளக்கினர். இந்த எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளதால், இந்தியா எழுந்து நிற்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், சரஸ்வதி பவுண்டேஷன் இயக்குநர் கல்யாணராமனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சென்டர் பார் சவுத் இண்டியன் ஸ்டடீஸ் இயக்குநர் சந்தீப்குமார், ஏற்பாட்டு குழு செயலர் சிதம்பரநாதன், கல்லுாரி முதல்வர் சந்தோஷ்பாபு, கலை பண்பாட்டு மையத்தின் இயக்குநர் ரமாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்