Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஜெயலலிதாவின் ரூ.2,000 கோடி நகை, சொத்து ; விற்றால் தமிழக அரசுக்கு மிக பெரிய லாபம்

ஜெயலலிதாவின் ரூ.2,000 கோடி நகை, சொத்து ; விற்றால் தமிழக அரசுக்கு மிக பெரிய லாபம்

16 மாசி 2025 ஞாயிறு 07:43 | பார்வைகள் : 8295


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை, தமிழக அரசிடம் கர்நாடகா அரசு ஒப்படைத்து உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள், நில பத்திரங்களை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம், கர்நாடக அரசு ஒப்படைக்க வேண்டும்.


நகைகளை எடுத்து செல்ல, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அனைத்து ஏற்பாடுகளுடன் பெங்களூரு வந்து, பிப்ரவரி, 14, 15ம் தேதிகளில் எடுத்து செல்ல வேண்டும்' என, கடந்த மாதம், 29ம் தேதி சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி, கடந்த 13ம் தேதி இரவே, தமிழக உள்துறை இணை செயலர் ஆனி மேரி சுவர்ணா, லஞ்ச ஒழிப்பு எஸ்.பி., விமலா, கூடுதல் எஸ்.பி., புகழ்வேந்தன் தலைமையில், 30 க்கும் மேற்பட்ட போலீசார், பெங்களூரு வந்தனர்.

நேற்று முன்தினம் காலையில், விதான் சவுதாவில் உள்ள கருவூலத்தில் இருந்த ஆறு பெட்டிகளில், நான்கு பெட்டிகளில் இருந்த நகைகள், சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்திற்கு எடுத்து வரப்பட்டன. நீதிபதி மோகன், ஆனி மேரி சுவர்ணா, விமலா, புகழ்வேந்தன், பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேகர் மேற்பார்வையில், நகைகளை சரிபார்க்கும் பணி நடந்தது.

நில ஆவணம்


நீதிபதி மோகனிடம் என்னென்ன நகைகள் என்ற பட்டியல் கொடுக்கப்பட்டது. அவர் பட்டியலை வாசிக்க, நகை மதிப்பீட்டாளர் மதிப்பீடு செய்தார். பின், நகைகள் மீண்டும் பெட்டிக்குள் வைக்கப்பட்டன.

மாலை, 5:45 மணி வரை, மூன்று பெட்டிகளில் இருந்த நகைகள் மட்டுமே எண்ணப்பட்டன. இந்த மூன்று பெட்டிகள், எண்ணப்படாத பெட்டியில் இருந்த நகைகள் மீண்டும் விதான் சவுதாவுக்கு எடுத்து செல்லப்பட்டன. நேற்று காலை, 10:00 மணிக்கு விதான் சவுதாவில் இருந்து, ஆறு பெட்டிகளும் நீதிமன்றத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டன. நீதிபதி மோகன் முன்னிலையில், 2வது நாளாக நகைகளை சரிபார்க்கும் பணி நடந்தது.

நேற்று முன்தினம் யார், யார் இருந்தனரோ அவர்கள் அப்படியே இருந்தனர். காலை, 10:30 மணிக்கு ஆரம்பித்த நகை சரிபார்க்கும் பணி, மதியம், 1:00 மணிக்கு முடிந்தது.

பின், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கொண்டு வந்த, ஆறு இரும்பு பெட்டிகளில் நகைகள் அடுக்கி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து, ஜெயலலிதா பெயரில் இருந்த 1,000 ஏக்கர் நில ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஆவணங்களை சூட்கேஸ்களில் வைத்தனர். வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தையும், உங்களிடம் ஒப்படைத்து விட்டோம் என்று கூறி, தமிழக அதிகாரிகளிடம், கர்நாடக அதிகாரிகள் எழுதி வாங்கிக் கொண்டனர்.

 ஏழு வாகனங்கள்


இந்த நடைமுறைகள் முடிந்த பின், மதியம், 3:30 மணிக்கு நீதிபதி அறையில் இருந்து, இரும்பு பெட்டிகள் வெளியே எடுத்து வரப்பட்டன.

மூன்றாவது மாடியில் உள்ள நீதிபதி அறையில் இருந்து, லிப்ட் மூலம் ஆறு பெட்டிகளும் தரைதளத்திற்கு கொண்டு வரப்பட்டன.முன்னதாக தமிழக அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம், கவனமாக செல்லுங்கள் என்று, நீதிபதி மோகன் கூறினார்.

தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஏ.எஸ்.டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான வேனில், நகைகள் இருந்த ஆறு பெட்டிகளும் சரியாக மாலை, 3:45 மணிக்கு ஏற்றப்பட்டன.

நில ஆவணங்கள் இருந்த சூட்கேஸ்கள், போலீசாரின் உடைமைகள் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டன. கர்நாடக போலீஸ் வேன் முன் செல்ல, அதனை பின்தொடர்ந்து தமிழக உள்துறை இணை செயலர் ஆனி மேரி சுவர்ணா வந்த கார், போலீசார் வந்த வாகனங்கள் சென்றன. நகை ஏற்றி சென்ற வாகனம், எஸ்கார்ட் வாகனம் உட்பட ஏழு வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்ட வாகனங்கள், தமிழக எல்லையான ஓசூரை வந்தடைந்ததும், கர்நாடக போலீசார் திரும்பிச் சென்றனர். அவர்களுக்கு தமிழக போலீசார் நன்றி தெரிவித்தனர். பின், சென்னையை நோக்கி பயணித்தனர்.

* தங்க கத்தி, வாள், பேனா

முன்னதாக நீதிமன்றத்தின் முதல் மாடியில் உள்ள பத்திரிகையாளர் சந்திப்பு அரங்கில், அரசு வக்கீல் கிரண் ஜவளி அளித்த பேட்டி:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், சொத்து ஆவணங்களை எடுத்து செல்ல வரும்படி, கடந்த மாதம், 29 ம் தேதி நீதிபதி மோகன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, தமிழகத்தில் இருந்து தமிழக உள்துறை இணை செயலர் ஆனி மேரி சுவர்ணா, லஞ்ச ஒழிப்பு எஸ்.பி., விமலா, கூடுதல் எஸ்.பி., புகழ்வேந்தன் மற்றும் போலீசார் வந்திருந்தனர்.

பிப்ரவரி, 14, 15ம் தேதிகளில் எங்களிடம் இருந்து தங்கநகைகள், சில பதிக்கப்ப்ட வைர கற்கள், மரகதம், மாணிக்கம், மூன்று சில்வர் பொருட்கள் என, 27 கிலோ எடையுள்ளவற்றை பெற்றுக் கொண்டனர். தமிழக அரசின் உரிமம் பெற்ற நகை மதிப்பீட்டாளர் பிரபாகரன், இந்த பணியில் ஈடுபட்டார். நகைகளின் மதிப்பு, 60 கோடி ரூபாய். திருப்பி கொடுக்கப்பட்ட நகைகளில் இரண்டு கிலோ ஒட்டியாணம், ஒரு கிலோ கிரீடம், ஒன்றரை கிலோ தங்க கத்தி, 60 கிராம் எடையுள்ள தங்க பேனா, தங்க கைகடிகாரம், தங்க வாள் முக்கியமானவை.

* சொகுசு பஸ்


கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த நில ஆவணங்கள், பெட்டிகளில் இருந்த 2 லட்சத்து 20 ஆயிரத்து 384 ரூபாய் மதிப்புள்ள, பழைய ரூபாய் நோட்டுகளை திரும்ப ஒப்படைத்து உள்ளோம். ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, 10 கோடியே 18 லட்சத்து 78 ஆயிரத்து 591 ரூபாய் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. அந்த தொகை தமிழக வங்கிகளில் கணக்கில் உள்ளது.

அதை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டு உள்ளார். சொத்து குவிப்பு தொடர்பான விசாரணையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட டி.என்09 எப்02575 என்ற சொகுசு பஸ் தற்போது, சென்னை சிறப்பு விசாரணை குழு கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பஸ்சுக்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை. அந்த பஸ்சை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை, தமிழக அரசு தன் வங்கிக்கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

* ரூ.13 கோடி


தமிழகத்தின் சென்னை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், துாத்துக்குடி என, ஆறு மாவட்டங்களில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான, 1,512.16 ஏக்கர் நில ஆவணங்களையும் ஒப்படைத்து உள்ளோம். நாங்கள் திருப்பி ஒப்படைத்து உள்ள நகைகள், சொத்து ஆவணங்களை தமிழக அரசு பொது ஏலம் விடலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வழங்கலாம். அது, அரசின் முடிவை பொறுத்தது. நகைகளை ரிசர்வ் வங்கியில் தற்போதைய மார்க்கெட் நிலவரத்திற்கு விற்றுக் கொள்ளலாம்.

சொத்து குவிப்பு வழக்கில் முன்னர் கூறப்பட்ட தீர்ப்பின் போதே, கர்நாடக அரசுக்கு, 5 கோடி ரூபாய் செலவானது. தற்போது வழக்கு தொடர்பான மேலும் சில வழக்கு விசாரணைக்காக, கூடுதலாக, 8 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. மொத்தம், 13 கோடி ரூபாய். இந்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த போது, சசிகலா, இளவரசி தலா 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்தினர். மொத்தம் எங்களிடம், 20 கோடி ரூபாய் உள்ளது. அதில், 13 கோடி ரூபாயை கழித்து விட்டு, ஏழு கோடி ரூபாயை தமிழகத்திடம் வழங்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். பெட்டியில் இருந்து ஐந்து சேலைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த சேலைகள், ஜெயலலிதாவுக்கு யாரோ பரிசாக அளித்தவை. அவற்றை மதிப்பிடவில்லை.

11,000 சேலைகள்


ஜெயலலிதாவின், 11,000த்துக்கும் மேற்பட்ட சேலைகள், அவர் பயன்படுத்திய செருப்புகள் உள்ளிட்டவைகளும் நம்மிடம் இருப்பதாகவும், திரும்ப ஒப்படைக்க போவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகின. அதில் உண்மை இல்லை. எங்களிடம் இருந்தவை நகைகள், நில ஆவணங்கள் மட்டும் தான்; அவற்றை ஒப்படைத்து விட்டோம். அத்துடன் இந்த வழக்கு முடிந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதைய மதிப்பு, 56.53 கோடி ரூபாய்


கடந்த, 1996ல் நகைகளை பறிமுதல் செய்த போது, அதன் மதிப்பு, 3.47 கோடி ரூபாய். தற்போதை மதிப்பு, 56.53 கோடி ரூபாய். 1,562 ஏக்கர் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், 1,000 ஏக்கர் நிலத்திற்கு தான் ஆவணங்கள் உள்ளன. 562 ஏக்கர் நிலத்திற்கு சரியான ஆவணம் இல்லை. ஒரே நிலத்தை பல முறை பதிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. 1,000 ஏக்கர் நிலமும், நகைகளின் மதிப்பும், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. நகை, பணத்தை விற்றால் தமிழக அரசுக்கு மிக பெரிய லாபம் கிடைக்க போவது உறுதி.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்