Paristamil Navigation Paristamil advert login

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை இரத்துச் செய்யும் மனு விசாரணைக்கு

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை இரத்துச் செய்யும் மனு விசாரணைக்கு

15 தை 2025 புதன் 13:20 | பார்வைகள் : 2980


இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 
புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எம்.கோபல்லவ முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யத் தனது கட்சிக்காரருக்குக் கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரினார். 
 
நீதியரசர்கள் குழாம் உரிய வகையில் அமைக்கப்படாததால், அடுத்த வழக்கு விசாரணையின் போது இந்தக் கோரிக்கையை முன்வைக்குமாறு நீதியரசர், சட்டத்தரணியிடம் தெரிவித்தார். 
 
இதனையடுத்து, குறித்த மனு எதிர்வரும் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த பொதுத் தேர்தலின் போது அரச வைத்தியராகக் கடமையாற்றிய நிலையில், வேட்பு மனுவைச் சமர்ப்பித்ததாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
அரச சேவையிலிருந்து விலகாமல் இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்வது சட்டவிரோதமானது எனவும் அது தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது எனவும் மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்