Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

வட மாகாணத்தில் எலிக்காய்ச்சல் தீவிரம் - சுகாதார பிரிவு எச்சரிக்கை

வட மாகாணத்தில் எலிக்காய்ச்சல் தீவிரம் - சுகாதார பிரிவு எச்சரிக்கை

12 மார்கழி 2024 வியாழன் 09:43 | பார்வைகள் : 4146


வட மாகாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தவர்களில் சிலரது இரத்த மாதிரி பரிசோதனையில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (11) மாலை வரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்கள் வடமராட்சி மற்றும் தென்மராட்சியில் வசித்தவர்கள்.

Leptospirosis (எலிக்காய்ச்சல்) என்பது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் நோயாகும்.

இது சூறாவளி அல்லது வெள்ளத்திற்குப் பிறகு மக்கள் அசுத்தமான நீரில் நடந்து அலையும் போது அல்லது அதை குடிக்க அல்லது குளிக்க பயன்படுத்தும் போது பரவும் நோயாகும்.

Leptospirosis பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் [எலிகள், நாய்கள், கால்நடைகள் ஆடு மாடு, பன்றிகள் மற்றும் வனவிலங்குகள்]

வெள்ள நீர், ஆறுகள் அல்லது ஓடைகள் போன்ற நன்னீர், பாதுகாப்பற்ற குழாய் நீர் என்பவற்றுடன் கலந்த நீரை பருகுவதால்,

காயங்களில் அசுத்த நீர் படுவதால்,

அசுத்த நீர் கண் வாய் மூக்கு என்பவற்றிலுள்ள சீத மென்சவ்வில் படுவதனால் அல்லது

பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீரால் மாசுபட்ட உணவினை உண்பதால்

அதில் காணப்படும் பாக்டீரியா வாய் வழியாக அல்லது காயங்கள் அல்லது கீறல்கள் ஊடாக அல்லது கண்கள், மூக்கு போன்ற மென்சவ்வினூடாக உடலினுள் செல்வதால் நோய் தொற்று ஏற்படுகிறது.

இந்நோய் மனிதனில் இருந்து மனிதனுக்கு நேரடியாக பரவாது.

வடக்கு மக்களே மிக அவதானமாக இருங்கள்.

1. சுத்தமான கொதித்து ஆறிய நீரை பருகவும்.

2. குளம் குட்டைகளில் குளிக்க, நீந்த வேண்டாம்.

3. குளம் குட்டைகளில் இருந்து நீரை நீர் அருந்த, வாய் கொப்பளிக்க வேண்டாம்.

4. கால்களில் செருப்பு அல்லது சப்பாத்துடன் நிலத்தில்/ சேற்று நிலத்தில் இறங்கவும்.

5. இயலுமானவரை வெள்ளத்தில் இறங்க வேண்டாம்.

உங்களுக்கு எலிக்காய்சல் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் உள்ளது என கருதினால் நோய் ஏற்படுவதை தடுக்க வழி உள்ளது. நீங்கள் முன்னெச்சரிக்கையாக Doxycycline / சிறுபிள்ளைகள் Azithromycin மாத்திரைகளை வைத்திய ஆலோசனையின் பின்பு பாவிக்கலாம்.

இம்மாத்திரைகளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பணிமனைகளில் உங்கள் பிரதேச PHI ஊடாக பெற்றுக்கொள்ளமுடியும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்