Paristamil Navigation Paristamil advert login

இந்தியா -சீனா ஒப்பந்தம் எதிரொலி; எல்லையில் படை குறைப்பு ஆரம்பம்!

இந்தியா -சீனா ஒப்பந்தம் எதிரொலி; எல்லையில் படை குறைப்பு ஆரம்பம்!

25 ஐப்பசி 2024 வெள்ளி 03:06 | பார்வைகள் : 3043


இந்தியா -சீனா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து, கிழக்கு லடாக் பகுதியில், நேருக்கு நேர் மோதும் வகையில் இருந்த இரு நாட்டு ராணுவத்தினரும் பின்வாங்கியுள்ளனர். இரு தரப்பிலும் இருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன.

சீனாவுடன் நமக்கு எல்லை குறித்த பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. எல்லைகள் இதுவரை துல்லியமாக வரையறை செய்யப்படவில்லை. பதிலாக, எல்.ஏ.சி., எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு, இரு நாட்டு ராணுவமும் அவரவர் பகுதியில் ரோந்து செல்கின்றன. இந்நிலையில் கால்வான் பகுதியில் 2020ல் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இரு நாடுகளின் உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் சீர்கெட்டது.

இருநாட்டு ராணுவத்தினரும், நேருக்கு நேர் மோதும் வகையில் எல்லையில் படைகளை குவித்தனர். இதற்கு தீர்வு காண நான்காண்டுகளாக, இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்தது. அதன் முடிவாக, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இருநாட்டு ராணுவத்தினரும், எந்தெந்த பகுதியில் ரோந்து செல்வது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து, ரஷ்யாவில் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசினர். அப்போது, எல்லையில் ராணுவ வீரர்களை வாபஸ் பெறும் முடிவிற்கு, இருநாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர். அதன்படி, இருநாட்டு ராணுவத்தினரும் தங்களது நிலைகளில் இருந்து பின்வாங்க தொடங்கியுள்ளனர்.

சீன ராணுவமும் அப்பகுதியில் தங்கள் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தது, இந்திய ராணுவமும் சில படைகளை திரும்பப் பெற்றது. எல்லையில் கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதனால் இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறைந்து இயல்பு நிலை சூழல் உருவாகியுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்