ட்ரம்ப் அமைச்சரவையில் எலான் மஸ்குக்கு முக்கிய இடமளிக்கப்படுமா..?
9 கார்த்திகை 2024 சனி 09:03 | பார்வைகள் : 1071
ட்ரம்புடன் உக்ரைன் ஜனாதிபதி தொலைபேசியில் பேசும்போது எலான் மஸ்க் குறுக்கே புகுந்த விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக, அவருக்கு ஆதரவாக பணத்தை வாரி இறைத்தது பலரும் அறிந்ததே.
ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ட்ரம்ப் அமைச்சரவையில் எலான் மஸ்குக்கு முக்கிய இடமளிக்கப்படலாம் என்னும் ரீதியில் ஒரு பக்கம் செய்திகள் பரவலாக வெளியாகிவருகின்றன.
இந்நிலையில், அந்த செய்திகளை உறுதி செய்யும் வகையில், ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ட்ரம்பை தொலைபேசியில் அழைத்துள்ளார்.
அப்போது, குறுக்கே புகுந்து எலான் மஸ்க் ஜெலன்ஸ்கியிடம் பேசியதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, ஜெலன்ஸ்கி ட்ரம்பை தொலைபேசியில் அழைக்கும்போது, எலான் மஸ்க் ட்ரம்புடன் இருந்தாராம்.
ட்ரம்ப் தொலைபேசியை ஸ்பீக்கரில் போட, ஜெலன்ஸ்கி ட்ரம்புடன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த எலான் மஸ்கும் ஜெலன்ஸ்கியிடம் பேசியதாக தெரிகிறது.
அப்போது, ஜெலன்ஸ்கியும், போரின் மத்தியில் ஸ்டார்லிங்க் மூலமாக உக்ரைனுக்கு தகவல் தொடர்பு வழங்குவதற்காக எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆக, இப்படி ஒரு முக்கியமான விடயத்திலேயே எலான் மஸ்க் தலையிடும்போது, ட்ரம்ப் அரசிலும் அவர் முக்கியமான இடம் வகிக்கக்கூடும் என்னும் ரீதியில் செய்திகள் வெளியாகிவருகின்றன.