ஹர்திக் பாண்டியா அடித்த அந்த ஒற்றை சிக்சர் - இந்திய டி20 கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை
8 ஐப்பசி 2024 செவ்வாய் 09:08 | பார்வைகள் : 898
குவாலியரில் நடைபெற்ற இந்தியா-வங்கதேச டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
16 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்த அவர், கீப்பருக்கு பின்னால் அடித்த ஷாட் குறித்து ரசிகர்கள் இன்னும் பேசி வருகின்றனர்.
இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா சாதனை ஒன்றையும் படைத்தார்.
அவர் அடித்த சிக்ஸர் மூலம், டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்து அதிக முறை இந்திய அணியை வெற்றி பெற வைத்த வீரர் என்கிற பெருமையைப் பாண்டியா பெற்றுள்ளார்.
இதற்கு முன் 4 முறை சிக்சர்கள் அடித்து இந்திய அணியை விராட் கோலி வெற்றி பெற வைத்திருந்த நிலையில், இந்த போட்டியில் சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்ததன் மூலம் 5 முறை சிக்சர்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா தட்டிச் சென்றுள்ளார்.
மேலும், ஹர்திக் பாண்ட்யா தனது ஆல்-ரவுண்டர் திறமையையும் வெளிப்படுத்தி, இந்த போட்டியில் விக்கெட் ஒன்றையும் கைப்பற்றியுள்ளார்.
இது அவருக்கு டி20 கிரிக்கெட்டில் 87 விக்கெட் ஆகும், இதன் மூலம் டி20-யில் 86 விக்கெட் எடுத்துள்ள அர்ஷ்தீப் சிங்கை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இந்த போட்டியில், 128 ஓட்டங்கள் இலக்கை 11.5 ஓவர்களில் அடைந்ததன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.