Paristamil Navigation Paristamil advert login

சென்னை மெரினாவில் இன்று விமானங்களின் சாகச நிகழ்ச்சி!

சென்னை மெரினாவில் இன்று விமானங்களின் சாகச நிகழ்ச்சி!

6 ஐப்பசி 2024 ஞாயிறு 04:17 | பார்வைகள் : 4099


இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

சென்னை மெரினாவையொட்டிய காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு நேர் எதிரில் இந்த சாகச நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்கள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் ஆகியோருக்காக மட்டும் பிரத்தியேகமாக பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றபடி பார்வையாளர்கள் நின்றபடியேதான் சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்க முடியும். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை என 2 மணி நேரம் இந்த சாகச நிகழ்ச்சி நடக்கிறது. 

சாகச நிகழ்ச்சியை பார்க்கவரும் பார்வையாளர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக, காமராஜர் சாலையையொட்டி 22 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு அதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்திருக்கின்றனர்.

மேலும் பாதுகாப்பு பணிக்காக சுமார் 8 ஆயிரம் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். சாகச நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளுக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் மாநகர பஸ்களுடன், கூடுதலாக சிறப்பு பஸ்களும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ளன. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்