செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க தனி நீதிபதி!
 
                    1 ஐப்பசி 2024 செவ்வாய் 03:13 | பார்வைகள் : 7488
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை விசாரிக்க, தனி நீதிபதியை நியமிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது, வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதில் நடந்துள்ள பணப்பரிமாற்ற மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
ஒப்புதல்
இந்நிலையில், தி.மு.க., வில் இணைந்த செந்தில் பாலாஜி, அமைச்சரானார். கடந்தாண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. நீண்ட காலம் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த அவர், ஒரு கட்டத்தில் பதவியை ராஜினாமா செய்தார்.
அமலாக்கத் துறை வழக்கில், 471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் வழங்கியது. உடனடியாக அவர் மீண்டும் அமைச்சரானார்.
வேலைக்கு பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பான வழக்கை, சென்னையில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
'இது போன்ற வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும். ஆனால், நீண்ட காலமாகியும் விசாரணை முடியவில்லை.
'மேலும், அரசு தரப்பில் ஆஜராகும் அரசு வழக்கறிஞரும் நியமிக்கப்படவில்லை. இவற்றை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்' என, புகார்தாரர்கள் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆகஸ்ட் 23ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியிருந்தது. அத்துடன், செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க, கடந்த ஜனவரியில் மாநில கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிப்பதில் காலதாமதம் செய்யப்படுவது குறித்தும் கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அறிவுறுத்திஇருந்தது.
அறிக்கை தாக்கல்
இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான 23 வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நீதிமன்றத்தில், மாநில அமைச்சர்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன; அவற்றின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக தெரிகிறது. செந்தில் பாலாஜி மீதான வழக்கின் முக்கியத்துவம் கருதி, அதை அதிக பணிச்சுமை இல்லாத மற்றொரு செஷன்ஸ் நீதிபதிக்கு மாற்ற வேண்டும்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதன்அடிப்படையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தகுந்த முடிவை எடுக்க வேண்டும். செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிபதி தொடர்பான தகவல்களை, 25ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் ஏற்கனவே, ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள், 600க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் உள்ளன. அதனால், விரிவாக விசாரிக்க வேண்டிஉள்ளது.
ரத்து செய்ய வேண்டும்
இதற்கிடையே, வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிக்கை தயார் செய்துள்ளார். அதன் மின்னணு நகலை பெற வேண்டும். அதை வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் பகிர வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
முன்னதாக, மனுதாரர்கள் தரப்பில் வாதிடுகையில், 'ஜாமின் வழங்கிய போது, அவர் அமைச்சராக இல்லை, அதனால், சாட்சியங்களை கலைக்க மாட்டார் என்று கூறப்பட்டது.
'தற்போது அவர் மீண்டும் அமைச்சராகியுள்ளார். எனவே, ஜாமின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, கோரப்பட்டது. இது தொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்யும்படி அமர்வு கூறியுள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     



















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan