வயநாடு பேரிடருக்கு காரணம் என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்

14 ஆவணி 2024 புதன் 15:14 | பார்வைகள் : 4113
வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவுக்கு பலவீனமான சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட 10 சதவீதத்திற்கு அதிகமான மழைப்பொழிவே காரணம் என சர்வதேச விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை 30ல் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 231க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த பேரிடர் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதற்கான காரணம் குறித்து இந்தியா, ஸ்வீடன், அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த 24 விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
அதில், பலவீனமான சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட 10 சதவீதத்திற்கும் அதிகமான மழைப்பொழிவு காரணமாக பேரழிவு ஏற்பட்டது. சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து இருந்தால், மழை 4 சதவீதம் அதிகரித்து இருக்கும்.
ஒரு நாளில் அதிக மழை பொழிவு பதிவானது என்பது, உலகம் வெப்பமயமாதல் என்ற கூற்றுக்கு சான்றாக அமைகிறது. வெப்பமான வளிமண்டலம், ஈரப்பதத்தை கொண்டு மழைப்பொழிவை அதிகரிக்கிறது.
வயநாட்டில் நிலப்பரப்பு, நிலப்பரப்பு மாற்றங்கள் மற்றும் நிலச்சரிவுக்கான காரணம் ஆகியவை இடையே உள்ள தொடர்பு தற்போதுள்ள ஆய்வுகள் மற்றும் காரணிகள்( குவாரிகள் அமைத்தல், வனப்பகுதி அழிப்பு) இருந்து முழுமையாக கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து உள்ளனர்.
அதேநேரத்தில் காடுகள் அழிப்பு, குவாரி அமைத்தல் மற்றும் அதிக மழைப்பொழிவே இந்த பேரிடருக்கு காரணம் என வேறு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.