Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

வரலாற்றுப் பதிவும் உலக அணுவாயுதப் போக்கும் : ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நினைவுதினம்

வரலாற்றுப் பதிவும் உலக அணுவாயுதப் போக்கும் : ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நினைவுதினம்

8 ஆவணி 2024 வியாழன் 09:05 | பார்வைகள் : 5961


ஆறாம் திகதி , ஆகஸ்ட் மாதம் "ஹிரோஷிமா நினைவு தினம்" .

"காலத்தால் அழிக்க முடியாத வடுக்களாக"  நிகழ்ந்த ஒரு அவலச்  சம்பவம் ! 6.8.2024 எழுபத்தொன்பது வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகில் நடந்தேறியதை நினைவுப்படுத்தும் ஒரு தினம்!

உலகத்திலேயே  சூரியன் முதலில் உதிக்கும் தேசம் ஜப்பான் ஆகும். எல்லா நாட்களைப் போன்று அன்றும், அந்த தேசத்திலும் சூரிய ஒளி பிரகாசித்தது. 

மக்கள் வழமை போல தத்தமது  கடமைகளை மகிழ்வுடனும், எதிர்காலம் நோக்கிய திடமான சிந்தனைகளுடனும் ஆரம்பித்தனர்.  குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகினர். 

பெரியவர்கள் தொழிலுக்குச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.  வீட்டில் உள்ள தாய்மார்களோ தமது அன்றாட கருமங்களை செய்துகொண்டிருந்தனர்.

ஆனால், அந்த நாளே அம்மக்களது வாழ்க்கையை, தலைவிதியை, மாற்றியமைக்கப் போகும் ஒரு சோகமிக்க நாளாக மாறுமென, அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆம்!  

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி சுமார் 79 வருடங்களுக்கு முன்பாக போயிங்  பி- 29 என்ற அமெரிக்காவின் "எனோலாகே" விமானமானது விமானியும் படைத்தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரால் "டினியன்" விமான தளத்திலிருந்து அதிகாலையில் ‘லிட்டில் போய்”  என்று பெயரிடப்பட்ட அணுகுண்டைத் தாங்கி ஹிரோஷிமா நகரத்தை நோக்கி புறப்பட்டது. (இத்தளபதியின் தாயார் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும்). 

சரியாக ஜப்பான் நேரப்படி காலை 8:16  மணிக்கு (இலங்கை நேரம் அதிகாலை 04: 46 மணிக்கு) உலகின் முதல் அணுகுண்டை அமெரிக்கா ஹிரோஷிமாவில் வீசியது. 

64 கிலோ எடையுள்ள ‘யுரேனியம் 235’ குண்டு தரையில் விழுந்த 45 வினாடிக்குள் சுமார் 5 மைல் சுற்றளவுக்கு  ஹிரோஷிமா நகரின் 60 சதவீத பகுதிகளை கண் மூடித் திறப்பதற்குள் தரைமட்டமாக்கியது.

ஹிரோஷிமா 905.1 கிலோ மீற்றர் பரப்பைத் தன்னகத்தே கொண்ட மாகாணமாகும். இப்பிரதேசத்தில் அணுகுண்டு விழுந்ததும் அது பாரிய சப்தத்துடன் வெடித்தது. சுமார் 2000 அடிகளுக்கு மேல் தீச்சுவாலை மேலெழுந்தது. பதினாறு கிலோ மீற்றருக்குட்பட்ட சகல கட்டடங்களும் தரைமட்டங்களாகின. 

பல்லாயிரக்கணக்கான  மக்கள் மாண்டனர். பெருமளவானவோர் காயமடைந்தனர். அங்கவீனமானவர்கள் பலர். ஏராளமான சொத்துக்கள் நிர்மூலமாகின. இயற்கை வளங்கள் அழிந்தன. பல்வேறுபட்ட உயிரினங்கள் கருகி மாண்டன.

கண்மூடி திறப்பதற்குள் மனித குலமே வெட்கி நாணும்  அளவுக்கு பாரிய அளவிலான உயிர்கள் அணு ஆயுதத்திற்கு இரையாகின.

இந்த அணு ஆயுதத்தின் கதிர்வீச்சு தாக்கங்கள், இன்றும் அந்நகரில் பிறக்கும் சில குழந்தைகள் வளர்ச்சி குறைபாட்டுத் தன்மையுடனும், புற்றுநோய் போன்ற இன்னோரன்ன நோய்களாலும், பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் சொல்லப்படுகின்றது.

உலகே இன்று வரை பார்த்திராத ஒரு மிகப் பெரிய அழிவாக இது கருதப்படுகின்றது.

இவ்வாறான கொடூரத் தன்மையினைக் கண்ணுற்றவர்கள்  "ஹிரோஷிமா தினத்தை" நினைவு கூறவும், அதன் ஆபத்தை உலகுக்கு உணர்த்தவும், சமாதானத்தை வலியுறுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் உலகத்தில் வாழ்கின்ற மக்களால் "ஹிரோஷிமா நினைவு தினம்", அனுஷ்டிக்கப்படுகின்றது எனலாம். 

இன்றைய தினம் ஜப்பான் தேசத்தில் பொது விடுமுறை தினமாகப்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தினத்தின் நோக்கம் போருக்கு எதிராக, உலக ரீதியில் சமாதானம் நோக்கிய அரசியலை கொண்டு செல்ல வேண்டுமென்பதே ஆகும்.

இதன் ஓர் அங்கமாக தான் 1945ஆம் ஆண்டு உலகத்தில் சமாதானத்தை ஏற்படுத்தும் முகமாக ஐக்கிய நாடுகள் சபை உருவானது.

இன்று பல்வேறு நாடுகள் தமது பாதுகாப்புக் கருதி, அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாகக்  கூறுகின்றன. 

அணுகுண்டு வீசப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு,  1949ஆம் ஆண்டில் அன்றைய சோவியத் யூனியனானது தனது முதலாவது அணுகுண்டு பரிசோதனையை மேற்கொண்டது .

அதனைத் தொடர்ந்து 1952ஆம் ஆண்டு ஐக்கிய ராஜ்யமும்,  1960ஆம் ஆண்டு பிரான்சும்,  1964ஆம் ஆண்டு சீனாவும் , அணுகுண்டு பரிசோதனையை மேற்கொண்டன.

1986ஆம் ஆண்டு அன்றைய சோவியத் யூனியனில் ஒரு பகுதியாக காணப்பட்ட செர்னோபில் நகரம் ( இன்றைய யுக்ரேன் நகரில் உள்ளது)  அணு உலை வெடித்ததில் நூற்றுக்கு குறைவானவர்களே உயிர் இழந்ததாகக் கணக்கிடப்பட்டிருந்தாலும், அதிலிருந்து வெளிவந்த கதிரியக்கம் பரவிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்த மக்களில் பலரும் புற்றுநோய் உபாதைக்கு உள்ளாகி உள்ளார்களென அறிய முடிகின்றது. 

எமது பிராந்தியத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்றும் அணுவாயுதப் பரிசோதனைகளைத்  தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன. 

இது இந்த பிராந்தியத்தின் சமாதானத்திற்கு ஒரு அச்சுறுத்தலாகவே கருதப்பட்டு வருகின்றது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற யுக்ரேன் - ரஷ்யா யுத்தத்தில் கூட ,  ரஷ்யா அணுகுண்டைப் பாவிக்கக் கூடுமென சில நாடுகள் எதிர்வு கூறியுள்ளன. 

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி 2023ஆம் ஆண்டு  தைவானுக்கு சென்றதையடுத்து சீனா - தைவானுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டிருந்தனை அன்றைய   செய்திகள் வெளிப்படுத்தி இருந்தன.

ராஜதந்திர ரீதியாக உலகில் உள்ள பல்வேறு நாடுகளுடன் தொடர்புகள் அற்ற நிலையில் இருக்கின்ற வட கொரியாவானது, இன்றும் மிக அபாயகரமான அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதனை நாம்  ஊடகங்கள் மூலமாக  அன்றாடம் அறிய முடிகின்றது. ரஷ்ய நாட்டு அதிபரின் அண்மைய வடகொரியா விஜயமானது , இரு நாடுகளுக்கும் இடையிலான  உறவுகளை வலுப்படுத்தி இருப்பதாகக் காணப்பட்டாலும், இந்த விஜயமானது சர்வதேச ரீதியில் பல சந்தேகங்களை கிளப்பியிருப்பதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சுவீடனில் அமைந்துள்ள "ஸ்டொக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின்" அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  உலக நாடுகளின் அணு ஆயுத உற்பத்தி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் படி,  உலக அளவில் தற்போது பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சுமார் 10,000 எனவும்,  இதில் சீனா வசம் மாத்திரம் சுமார் 500 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும்,  பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா,  ரஷ்யா, பிரிட்டன் , பிரான்ஸ், சீனா, இந்தியா , பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் ஆகிய ஒன்பது நாடுகள் அணு ஆயுத சக்தியினை தம் வசம் கொண்டுள்ளன. 

இந்தியாவின் கைவசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சுமார்  172ஆக  இருக்கும் அதே வேளை பாகிஸ்தான் வசம் 170 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் ஸ்டொக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் மேலும்  கணிப்பிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இந்தியா தனது அணு ஆயுதங்களை விரிவு செய்ததாகவும்,  இதற்கு நவீன முறையை பின்பற்றியதாகவும்,   தெரிவித்துள்ளது. நீண்ட தூரத்தில் உள்ள இலக்கை எட்டும் வகையில் அணு ஆயுதம் சார்ந்த மேம்பாடுகளை இந்தியா மேற்கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன. உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களின் கையிருப்பில் சுமார் 90 சதவீதமானவையை அமெரிக்கா,  ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த ஓராண்டில் உலக நாடுகளின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சுமார் 13 சதவீதத்தால் அதிகரித்துள்ளது . கடந்த வருடம் மட்டும் உலக நாடுகள் சுமார் 91 .3 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன. இதில் இந்தியாவின் பங்களிப்பானது 2.7 பில்லியன் டாலர்களாக காணப்படுகின்றது. அமெரிக்கா 51.5  பில்லியன் டொலர்களையும்,  சீனா 11.9 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் அணு ஆயுதத்திற்காக செலவிட்டுள்ளன.

உலக அளவில் தற்போது பயன்படுத்தக்கூடிய நிலையிலுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சுமார் 9585 ஆகும். இதில் சீனாவசம் மாத்திரம் 500 ஆயுதங்களாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி மாதம் 2024ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 12,221 போர்க்கப்பல்கள் இருந்ததாகவும்,  அவற்றில் 9,585 அணு ஆயுதங்கள் சாத்தியமான பயன்பாட்டுக்காக கையிருப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதம் இந்தியாவிலுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூரை சேர்ந்த ‘எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட்' பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து செபெக்ஸ் 2 என்ற புதிய வெடிகுண்டை தயாரித்து உள்ளது. உலகின் மிக சக்திவாய்ந்த வெடிகுண்டுகளில் ஒன்றாக இருக்கும்  செபெக்ஸ் 2 குண்டானது டிஎன்டி வெடிகுண்டைவிட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமெனக் கருதப்படுகின்றது. 

இந்த வகை வெடிகுண்டுகளை பிரம்மோஸ் ஏவுகணை உட்பட இந்தியாவின் அனைத்து வகை ஏவுகணைகளிலும் பயன்படுத்த முடியுமெனவும்,  பீரங்கி, போர் விமானம், போர்க்கப்பல், நீர்மூழ்கியில் இருந்தும் தாக்குதல் நடத்த முடியுமெனவும் கூறப்படுகின்றது.

இன்று உலக நாடுகளின் ராணுவக் கட்டமைப்புக்களில் டிஎன்டி, ஆர்டிஎக்ஸ், டைனமைட் உள்ளிட்ட வகைகளை சேர்ந்த வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. 

ரஷ்யா - யுக்கிரேன் யுத்தம், இஸ்ரேல்- ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையில் காணப்படுகின்ற பதற்ற நிலை,  சீனா - தாய்வான் பதற்ற நிலை,  இந்தியா- சீனா எல்லைத் தகராறு, இந்தியா - பாகிஸ்தான் முரண்பாடுகள் போன்ற இன்னொரு அந்த காரணிகளின் காரணமாக இன்னுமொரு யுத்தம் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுவதாக பெருமளவானோர் எதிர்வு கூறுகின்றனர்

இவ்வாறான நிகழ்வுகள் இன்றைய  காலகட்டத்தில் ஆரோக்கியமான விடயங்களாக கருதப்பட முடியாததாக உள்ளது.

அணுகுண்டுகளினை ஆபத்தான ரீதியில் பயன்படுத்த வாய்ப்புகள் இருப்பதனால், இதனை உற்பத்தி செய்யும் நாடுகள், இவைகளின் உற்பத்தி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டியது இன்று மிகவும் அவசியமாகின்றது.

இருக்கின்ற அணுவாயுதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்று உலகளாவிய ரீதியில் பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகின்றதனால்,   இவ்வாறன ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் சிக்காது பாதுகாக்கப்பட வேண்டும். 

அதனால், அனைத்து நாடுகளும் அணு ஆயுத உற்பத்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது அவசியமாகும். 

உலகில் அமைதி நிலவ, அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும். 

ஐக்கிய நாடுகள் சபையினது எதிர்பார்ப்பானது ஓர் அணு ஆயுதமற்ற உலகம், சாந்தி, சமாதானம் என்பன மக்களிடம் இருந்து தான் ஆரம்பமாக வேண்டும் என்பதாகும்.

ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்ற மக்கள் இதனது ஆபத்து தன்மையினை உணர்ந்து அதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டியது மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகின்றது.

அணுவாயுதங்களைத் தயாரிக்கின்ற நாடுகளின் மூலமாக, இந்த உலகம் இன்னும் ஒரு மாபெரும் அழிவினை, சந்திக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருத்தல் அவசியம். இதற்கு நல்ல உதாரணம் தான் ஜப்பானிய தேசம். 

ஹிரோஷிமா நகரம் முழுவதும் அழிவடைந்திருந்தாலும், அந்நாடு அதனால் துவளவில்லை. தன்னம்பிக்கைக்கு உதாரணமாக விளங்குவது ஜப்பானிய தேசம்.

ஜப்பான் இன்று உலக நாடுகளில் பல்வேறுத் துறைகளிலும் முன்னணி வகித்து,  உலகத்துக்கே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது. 

போர் சூழல் அற்ற, அமைதியான உலகத்தில் அன்புடனும் கருணையுடனும் பண்புடனும்  வாழ வேண்டுமென நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக!

"நாடுகள் தோறும் உறவே வருக பகையே வரவேண்டாம் 

சமாதானமே சமாதானமே தழுவுகின்றேன் உன்னை 

தர்மதேவனே தர்மதேவனே சரணடைந்தேன் உன்னை 

அமைதிப்புறாவே அமைதிப் புறாவே அழைக்கின்றேன் உன்னை" 

என்ற கவியரசு கண்ணதாசனின் கவியினை நினைவுகூர்வது இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமாகும்.

நன்றி வீரகேசரி

வர்த்தக‌ விளம்பரங்கள்