Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

மதுவுக்கு மறைமுக விளம்பரம்; கார் பந்தயத்தால் கண்ட பலன்; அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

மதுவுக்கு மறைமுக விளம்பரம்; கார் பந்தயத்தால் கண்ட பலன்; அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

1 புரட்டாசி 2024 ஞாயிறு 03:50 | பார்வைகள் : 7726


பார்முலா -4 கார் பந்தயம் நடக்கும் தீவுத்திடலை சுற்றி, மது பானத்துக்கு மறைமுகமாக விளம்பரம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுவால் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு என்பதால் அவற்றை பொதுவெளியில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில், அனைவரும் பார்க்கும் வகையில் விளம்பரம் செய்வது, குடிப்பழக்கத்தை அதிகரித்து சமூகத்தை சீரழிக்கவே செய்யும் என்பதால் இத்தகைய தடையை அரசு கொண்டு வந்துள்ளது.ஆனால், இந்த தடையை நுாதனமாக மீறும் வகையில், மது உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. 

மது பிராண்ட் பெயரிலேயே, தண்ணீர், சோடா போன்றவற்றை தயார் செய்து, அவற்றையும் விற்பனை செய்வது; அவற்றுக்கு விளம்பரம் செய்வது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.இதன் மூலம், தங்கள் தயாரிப்பு தண்ணீருக்கும், சோடாவுக்கும் நேரடி விளம்பரம், மதுவுக்கு மறைமுக விளம்பரம் செய்கின்றனர். இத்தகைய தவறுக்கு, தமிழக அரசும், கார் பந்தயம் மூலம் உடந்தையாக இருக்கிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

மதுவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் பா.ம.க., தலைவர் டாக்டர் அன்புமணி, நேற்றே இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து தன் ஆட்சேபத்தை பதிவு செய்திருந்தார். மறைமுக மது விளம்பரங்களை அகற்ற வேண்டும் என்பது அவரது கோரிக்கை.ஆனால், இன்று வரை அந்த விளம்பரங்கள் தீவுத்திடல் பகுதியில், கார் பந்தயம் நடக்கும் இடங்களில் அப்படியே உள்ளன. இதனால், கார் பந்தயம் மூலம் மதுவுக்கு மறைமுக விளம்பரம் செய்வது ஒன்று தான் கண்ட பலன் என்று சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

அன்புமணி அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேரடியாகவும், மறைமுகமாகவும் மது, புகையிலை பொருட்களின் விளம்பரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சோடா விளம்பரம் என்ற பெயரில் மது விளம்பரங்களையும், பான் மசாலாக்கள் பெயரில் புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், 2022 ஜூனில் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், சென்னையில் 'பார்முலா 4'கார் பந்தயம் நடக்கும் தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில், பொதுமக்களின் பார்வையில் பளிச்சென்று படும் வகையில்,'கிங் பிஷர்' மது வகையின் விளம்பரங்கள் மிகஅதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன.

இவை பார்வையாளர்களின் மனதில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகை மதுவை அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். இந்த விளம்பரங்களை தமிழக அரசு அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. மக்கள் நலன் கருதி, மறைமுக மது விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்