Paristamil Navigation Paristamil advert login

கெஜ்ரிவால் விவகாரத்தில் மேல் விசாரணை!

கெஜ்ரிவால் விவகாரத்தில் மேல் விசாரணை!

13 ஆடி 2024 சனி 02:51 | பார்வைகள் : 581


டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் அளித்தது. அதேநேரம், அமலாக்க துறையின் கைது அதிகாரம் குறித்து அதிகமான நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரைத்தது.

மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பான கொள்கையில் நிறுவனங்களுக்கு சாதகமான திருத்தங்கள் செய்து, முதல்வர் கெஜ்ரிவால் 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அமலாக்க துறை குற்றம் சாட்டியது.

ஒன்பது முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவாலை, மார்ச் 21ல் அமலாக்க துறை கைது செய்தது.


ஜாமினில் விடுவித்தது


லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக சுப்ரீம் கோர்ட் அவரை ஜாமினில் விடுவித்தது. தேர்தல் முடிந்ததும் மீண்டும் சிறை சென்றார். கீழ் கோர்ட் ஜூன் 20ல் ஜாமின் வழங்கியது. டில்லி ஐகோர்ட் அந்த ஜாமினை நிறுத்தி வைத்தது. இதனால், மூன்று மாதத்துக்கு மேல் சிறை வாசம் அனுபவித்து வருகிறார்.

அமலாக்க துறை என்னை கைது செய்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன் விபரம்:

கெஜ்ரிவால் ஜாமினில் விடுவிக்கப்படுவதற்கும், அவரிடம் விசாரணை நடத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வெளியே விட்டால் அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்ற அமலாக்க துறை வாதத்தை ஏற்க முடியாது.

வெறும் விசாரணைக்காக மட்டும் ஒருவரை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை. அவர் குற்றம் செய்திருக்கிறார் என விசாரணை அதிகாரிக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அந்த நம்பிக்கைக்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும். அந்த ஆதாரங்களையும், அதன்படி உருவான தன் அனுமானத்தையும் விசாரணை அதிகாரி எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும்.

கெஜ்ரிவால் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு மாநில முதல்வராக பணி செய்கிறார். அவருக்கென உரிமைகள் உள்ளன. 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.


விரிவான விசாரணை


பண பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 19ன் கீழ், ஒருவரை கைது செய்ய அமலாக்க துறைக்கு உள்ள அதிகாரம் பற்றி பல கேள்விகள் உள்ளன. அந்த அதிகாரத்தை அமலாக்க துறை அதிகாரி தன் இஷ்டப்படி பயன்படுத்த முடியாது.

சட்டம் அளித்துள்ள கைது செய்யும் அதிகாரத்தை அமலாக்க துறை எவ்வாறு பயன்படுத்துகிறது; சட்டப்படி அதன் செயல்பாடு சரிதானா என்பது குறித்து கெஜ்ரிவால் தரப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அவை குறித்து விரிவான விசாரணை தேவையாகிறது. இந்த கேள்விகளை, கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம்.

அந்த விசாரணை முடிவடையும் வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் அளிக்கிறோம். வெளியே போன பிறகும், அவர் முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது. கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது.


அதிகாரம்


கெஜ்ரிவால் முதல்வராக நீடிக்க தடை விதிக்க வேண்டும் என்ற வாதத்தை நிராகரிக்கிறோம்.

அவர் பதவியில் நீடிக்கக்கூடாது என்று கூற கோர்ட்டுக்கு அதிகாரம் இருக்கிறதா என தெரியவில்லை. அவரே தான் இதில் முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கினாலும், இன்னொரு வழக்கில் அவரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது; அதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

எனவே, அவர் சிறையில் இருந்து இப்போது வெளியே வர இயலாது. சி.பி.ஐ., வழக்கில் அவரது காவல் 25 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

உண்மை வென்றது

இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் அளிக்கும் என்பது பா.ஜ.,வுக்கு தெரியும். அதனால் தான் அவரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. பா.ஜ.,வின் சதி இப்போது வெளிப்பட்டுவிட்டது.ஆதிஷி, டில்லி அமைச்சர், ஆம் ஆத்மி
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்