அமெரிக்க ஜனாதிபதியின் மறதி- தொடரும் குளறுபடிகள்
12 ஆடி 2024 வெள்ளி 08:11 | பார்வைகள் : 1134
அமெரிக்க ஜனாதிபதியின் மறதியால் அமெரிக்க மக்கள் மீண்டும் ட்ரம்புக்கே வாக்களிக்க திட்டமிட்டு வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன.
தானாக எங்கோ நடந்து செல்வதும், உலகமே கவனித்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் உலகத் தலைவர்களின் பெயர்களை தப்புத் தப்பாக சொல்வதுமாக ஜோ பைடனின் குளறுபடிகள் தொடரும் நிலையில், இவர் கையிலா அமெரிக்காவின் அணு ஆயுதக் கட்டுப்பாடு உள்ளது என மக்கள் அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் மீண்டும் உளறிக்கொட்டியுள்ளார் ஜோ பைடன்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெற்றுவருகின்றது.
உக்ரைன் ஜனாதிபதியை அறிமுகம் செய்துவைத்தார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.
அப்போது பேசிய அவர், ’நான் இப்போது நிகழ்ச்சியை உக்ரைன் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்போகிறேன். பெரியோர்களே தாய்மார்களே, இதோ, ஜனாதிபதி புடின்’ என்றார் ஜோ பைடன்.
என்றாலும், அடுத்த விநாடியே தன் தவறைத் திருத்திக்கொண்டு, நாம் ஜனாதிபதி புடினை தோற்கடிக்கப்போகிறோம், அதன் மீதே என் கவனம் முழுவதும் இருக்கிறது என்று கூறிவிட்டு, மீண்டும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கைகுலுக்கி வரவேற்றார் ஜோ பைடன்.
அதேபோல, மாலையில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில், அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸை, ட்ரம்ப் என அழைத்து, பார்வையாளர்களை கதிகலங்கவைத்தார் ஜோ பைடன்.