ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி இன்று பேச்சு

9 ஆடி 2024 செவ்வாய் 03:00 | பார்வைகள் : 7152
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின், முதன் முறையாக, இரு நாட்கள் அரசு முறை பயணமாக, அந்நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, அதன் அண்டை நாடான ரஷ்யா, 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது. இரு ஆண்டுகளை கடந்தும் இரு நாடுகளுக்கு இடையே மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தியா - ரஷ்யா இடையிலான, 22வது வருடாந்திர உச்சி மாநாடு, ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க, டில்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார்.
ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின், ரஷ்யாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. கடைசியாக, 2019ல் ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். மேலும், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின், ரஷ்யாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது. மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ரஷ்யாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். தொடர்ந்து, ரஷ்ய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். இந்த காரில், அவருடன், ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் உடன் சென்றார். ஹோட்டலுக்கு வெளியே திரண்ட ஏராளமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, பிரதமர் மோடியை வரவேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரவு விருந்து அளித்தார்.
மாஸ்கோவில் இன்று, இந்தியா - ரஷ்யா இடையிலான, 22வது வருடாந்திர உச்சி மாநாடு நடக்கிறது. இதில், பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில், வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளில், இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து, இரு நாடுகளின் தலைவர்களும் விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
ரஷ்ய சுற்றுப்பயணத்தை இன்று முடித்துக் கொண்டு, மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்கு, பிரதமர் மோடி செல்ல உள்ளார். 40 ஆண்டுகளுக்குப் பின், அந்நாட்டிற்கு இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1