சாவகச்சேரி வைத்தியசாலை பதில் அத்தியட்சகர்
17 ஆடி 2024 புதன் 11:26 | பார்வைகள் : 1115
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகராக வைத்தியர் ராஜீவ் தற்போது கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை மாற்றக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த வாரம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகருக்கு ஆதரவாக தென்மராட்சி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா சுகவீன விடுமுறை எனத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை கொழும்புக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர கோபாலமூர்த்தி ரஜீவ் கடந்த செவ்வாய்க்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
எனினும், அந்த நியமனம் தவறானது என்றும், தான் விடுமுறையில் இருப்பதாகவும், தானே தொடர்ந்தும் பதில் வைத்திய அத்தியட்சகர் என்றும் வைத்தியர் அர்ச்சுனா கடந்த ஒரு வாரமாகத் தெரிவித்து வந்தார்.