■ Gare de l'Est நிலையம் அருகே கத்திக்குத்து தாக்குதல்... இராணுவ வீரர் படுகாயம்..!
16 ஆடி 2024 செவ்வாய் 04:59 | பார்வைகள் : 2184
Gare de l'Est தொடருந்து நிலையம் அருகே நேற்று திங்கட்கிழமை இரவு கத்திக்குத்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. 'அல்லா அக்பர்' என கோஷமிட்டுக்கொண்டு நபர் ஒருவர் கத்தி ஒன்றினால் இராணுவ வீரர் ஒருவரைத் தாக்கியுள்ளார்.
l'opération Sentinelle எனப்படும் சிறப்பு கண்காணிப்பு படையைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் இரவுநேர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, அவர் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தோள்பட்டையில் கத்திக்குத்துக்கு இலக்கான குறித்த வீரர், படுகாயமடைந்த நிலையில், அவசரப்பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முதல்கட்ட தகவல்களின் படி, தாக்குதலாளி 40 வயதுடைய பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர் எனவும், Kinshasa (Congo) நாட்டில் பிறந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 2018 ஆம் ஆண்டு Châtelet-Les Halles தொடருந்து நிலையத்தில் வைத்து ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் மருத்துவ கண்காணிப்பில் இருந்தவர் எனவும், அவர் விடுதலையானது எப்போது என்பது குறித்த விபரங்கள் தெரியவில்லை எனவும் அறியமுடிகிறது.
இராணுவ அமைச்சர் Sébastien Lecornu மற்றும் உள்துறை அமைச்சர்கள், தாக்குதலுக்கு இலக்கான இராணுவ வீரருக்கு தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.