சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அருச்சுனா
15 ஆடி 2024 திங்கள் 05:54 | பார்வைகள் : 1138
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகரான அருச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்துள்ளமையால் அங்கு குழப்பமான நிலைமை காணப்படுகிறது.
சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றிய இராமநாதன் அர்ச்சுனாவை சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் கடந்த 07ஆம் திகதி இரவு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண வைத்தியர் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்த பதில் வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்தார்.
இந்நிலையில் வைத்தியரை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக 07ஆம் திகதி இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் மறுநாள் 08ஆம் திகதி அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டது.
இந்நிலையில் 08ஆம் திகதி , நீண்ட இழுபறியின் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்ற வைத்தியர் அருச்சுனா , தான் விடுமுறையில் தான் செல்வதாகவும் மீண்டும் வருவேன் என கூறி சென்றார்.
வைத்தியர் வெளியேறி சென்றதுடன் மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வந்தது.
அதனை அடுத்து மறுநாள் 09ஆம் திகதி வடமாகாண சுகாதார திணைக்களத்தால், வைத்தியர் கே. ரஜீவ் புதிய பதில் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டு,பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் விடுமுறையில் சென்ற தான் விடுமுறை முடிய மீண்டும் வந்துள்ளேன் என முன்னாள் பதில் அத்தியட்சகர் பதில் அத்தியட்சகருக்கு உரிய அறையில் அமர்ந்துள்ளார்.
இதனால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் காணப்படுவதால் பாதுகாப்புக்காக பொலிஸார் வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரை வரவேற்க சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக மக்கள் கூடிய வேளை பொலிஸார் மக்களை வைத்தியசாலை சுற்று வட்டாரத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.